புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைமை அலுவலகம் மீள்பொலிவுற நடவடிக்கை எடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 10th, 2017

மக்கள் தமக்கு சேவை புரியக்கூடியதான அரசியல் தலைமைகளை இனங்கண்டுகொள்வது மட்டுமன்றி அவர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்வதனூடாகவே தமது அடிப்படை தேவைகள் உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கும் உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க நெறியாளர் மற்றும் பணியாளர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த கால அனுபவங்களை மக்கள் தமக்கான பாடமாக கொண்டு தமது எதிர்காலத்தை தீர்மானிக்கவேண்டும். அது சாதாரண நாளாந்த வாழ்க்கை தொடக்கம் அரசியல் வரை இந்த விடயத்தில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

அதன் அடிப்படையில்தான்  யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும்  இன்றுவரையான காலப்பகுதிவரை யுத்தத்தால் அழிவுற்றுக்கிடக்கும் இந்த பலநோக்கு கூட்டுறவு சங்க தலைமை காரியாலயம் புனரமைக்கப்படாதிருப்பது வேதனையளிக்கின்றது.

இருப்பினும் சங்க நிர்வாகத்தினர் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக அழிவுற்றுக்கிடக்கும் இந்த சங்கத்தின் தலைமை அலுவலகத்தை புனரமைப்பதற்கு துறைசார்ந்தவர்களூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக யுத்தத்தால் அழிவுற்று காணப்படம் குறித்த சங்கத்தின் கட்டடங்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் பார்வையிட்டார். இதன்போது, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் தவநாதன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெயராசா கிருபன் ஆகியோரும் உடனிருந்தனர்.

 

Related posts: