உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 24th, 2017
நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை இயற்றினாலும், எந்த நோக்கத்திற்காக அச் சட்டம் கொண்டுவரப்படுகின்றதோ, அதை நிறைவேற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டு இருக்க வேண்டியது முக்கியமாகும். சட்டத்தில் குறைபாடுகள் இருப்பின், அவை கண்டறியப்பட்டு நடைமுறைச் சிக்கல்கள் எழுவதற்கு முன்னரேயே திருத்தப்படல் வேண்டும்என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தம்)சட்டமூலம் தொடர்பாக இன்றையதினம் (24) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில் –
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இலங்கைச் சட்டவாக்கத்தின் 262ஆம் அத்தியாயமான உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலமாக இச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பான சட்டத்திலுள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் (56) ஐம்பத்தாறை திருத்துவதற்கு இச்சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றேன். நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை இயற்றினாலும், எந்த நோக்கத்திற்காக அச் சட்டம் கொண்டுவரப்படுகின்றதோ, அதை நிறைவேற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டு இருக்க வேண்டியது முக்கியமாகும். சட்டத்தில் குறைபாடுகள் இருப்பின், அவை கண்டறியப்பட்டு நடைமுறைச் சிக்கல்கள் எழுவதற்கு முன்னரேயே திருத்தப்படல் வேண்டும்.
இதிலும், உள்ளூர் அதிகாரசபைகளின் தேர்தல் தொடர்பான சட்டம் என்றாலும் சரி, மாகாண சபைகளின் தேர்தல் தொடர்பான சட்டம் என்றாலும் சரி, பொதுத் தேர்தல்கள் தொடர்பான சட்டம் என்றாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலுக்கான சட்டம் என்றாலும் சரி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்கின்ற தேர்தல் சட்டங்கள்,  அத் தேர்தல்களை நடத்தும்போது நடைமுறைச் சிக்கல்கள் தோன்றாதவாறு கரிசனையுடன் முற்பரிசீலனைக்கும், ஆய்வுக்கும், விமர்சனங்களுக்கும் உட்படுத்தி ஆய்வு செய்து இயற்றப்படவேண்டியது முக்கியமானதாகும். இதனால் நீதிமன்றங்களுக்குச் செல்வதையும் காலவிரயம், பணவிரயங்ள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்.
உள்ளூராட்சி என்பது கிராமம் மற்றும் பிரதேச மட்டத்தில் வாழ்கின்ற மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ள உருவாக்கப்பட்ட ஜனநாயக அமைப்பு முறையாகும். ஒவ்வொரு நாடுகளிலும் அந் நாடுகளின் மரபு முறைகளுக்கு ஏற்ப வௌ;வேறு பெயர்களால் அறியப்படுகின்ற போதும், நமது நாட்டில் உள்ளூராட்சி சபைகள் என்று அழைக்கின்றோம்.
ஜனநாயகப் பண்புகளில் மிக முக்கியமான எண்ணக்கருவாகக் கருதப்படும் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைமை இன்று நமது நாட்டில் கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிய நாடுகளில் முதன் முதலில் சர்வஜன வாக்குரிமை இலங்கைக்கு 1931ஆம் ஆண்டே ஆங்கிலேயே ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டது. இதன் பின்னரே ஏனைய ஆசிய நாடுகளுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டது.
மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்து எடுப்பதற்கும் அவர்களை நிராகரிப்பதற்கும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதி உச்ச அதிகாரமே தேர்தல் முறையாகும். ஆனால் இருநூறு (200) பிரதேச சபைகளின் தேர்தல்களை 2015ஆம் ஆண்டில் நடாத்தியிருத்தல் வேண்டும். வேறு சில உள்ளூராட்சித் தேர்தல்களை 2013ஆம் ஆண்டில் நடாத்தியிருக்க வேண்டும்.  துரஷ்டவசமாக நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படவில்லை. தற்போதைய நிலையில் நாட்டிலுள்ள (335) முன்னூற்று முப்பத்தைந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்பற்றி, அம் மன்றங்களின் பதவிக்காலம் முடிந்தும் சுமார் இரண்டு (02) வருடங்கள் கடந்த நிலையில் இச் சபையில் உள்ளுராட்சி சபைகளுக்கான சட்டத் திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் நாம் பங்குபற்றிக் கொண்டு இருக்கின்றோம்.
உள்ளூராட்சி மன்றங்களான பிரதேசபைகள், நகர சபைகள், மாநகர சபைகளின் ஆகியவற்றின் ஆட்சி நிர்வாகங்கள் செயலாளர்களிடமும், ஆணையாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது இல்லாத காரணத்தினால் அச் சபைகளின் நிர்வாகம் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன. இதனால்தான் திண்மக் கழிவுகளை அகற்றல், வீதி விளக்குகளை ஒளியூட்டல், வரிப்பணம் அறவிடுதல், உள்ளூராட்சி வீதிகளைத் திருத்தல், டெங்கு ஒழிப்பு, ஏனைய சுகாதார சேவைகளை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பான பிரச்சனைகள் மக்கள் மத்தியில் திருப்தியின்மையையும், அசளகரியங்களையும் ஏற்படுத்தியுள்ளதை நாங்கள் அனைவரும் நன்கு அறிவோம். உள்ளூராட்சி அங்கத்தவர்கள் பதவியில் இருப்பார்களாயின் அவர்களின் உதவியுடன் மக்கள் தமது தேவைகளைத் திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
தமது அரசியல் தலைமைகள் தொடர்பாக மக்களின் அபிப்பிராயங்களை அளவிடும் அளவுமானியாகவும் ஜனநாயகக் கருவியாகவும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அமைகின்றன.  கடந்த தேர்தல்களின் போது மக்களை ஏமாற்றியும், பொய் வாக்குறுதிகள் வழங்கியும் வாக்குகளை அபகரித்து, தாம் பொறுப்பேற்ற உள்ளூராட்சி சபைகளை செயற்திறனோடு மக்களுக்கு பயனுள்ள வகையில் நிர்வகிக்காமல், மோசடியில் ஈடுபட்டவர்களையும், அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களையும் எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
நிலைமை இவ்வாறு இருக்கையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வட்டாரத் தேர்தல் முறையில் தேர்தல்களை நடத்துவதற்கான விவாதங்கள் பல மட்டத்திலும் நடைபெற்றது. அதில் வட்டார எல்லைகளை தீர்மானிப்பதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவதில் தேர்தல் ஆணையகம் எதிர்கொள்ளக்கூடிய நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இறுதியில் அறுபது (60) வீதம் தொகுதி முறையிலும் நாற்பது (40) வீதம் விகிதாசார முறையிலும் தேர்தல் நடாத்தப்படல் வேண்டும் என்றும் அதில் 25 விகிதம் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் புதிய திருத்தம் முன்வைக்கின்றது.
அத்துடன் உள்ளூர் அதிகார சபைகளின் தேர்தல்கள் திருத்தச் சட்டம் அங்கிகரிக்கப்பட்டதும், உடனடியாக அரசாங்கம் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசியலில் பெண்களின் வகிபாகத்தை உறுதி செய்யும் வகையில் தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படுவது பாராட்டப்பட வேண்டியதாகும். அவ்வாறு செய்வதன் மூலம் ஆண் – பெண் சமத்துவத் தன்மையை பேணக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் மக்களின் குரலையும் ஜனநாயகத்தின் குரலையும் பிரதேச சபைகளில் ஓங்கி ஒலிக்கச் செய்ய முடியும்.
உள்ளூராட்சித் தேர்தல் வட்டாரங்களின் எல்லைகளைத் தீர்மானிக்கும் போது சிறு கட்சிகளுக்கும், சிறுபான்மை சிறுகட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வட்டார எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஏன் இதைக் கூறுகின்றேன் என்றால், உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தில் தமக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக சிறிய கட்சிகள் மற்றும், சிறுபான்மைக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன என்பதை நாம் கவனத்தில் கொண்டு, அவற்றுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும்.  இதேவேளை உள்ளூராட்சிச் சபைகளிலும் இரட்டை உறுப்பினர் வட்டாரங்களை அமைப்பதற்கான யோசனைகளையும் நடைமுறைப்படுத்தல் வேண்டும். அவ்வாறான ஏற்பாடானது, இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தையும், கிராம மட்டத்தில் ஜனநாயகப் பண்புகளையும் மேலோங்கச் செய்யும் என்பதையும் இச் சபையில் கூறி வைக்க விரும்புகின்றேன்.
எனவே, தற்போது திருத்தம் செய்வதற்கு இணங்கியுள்ள திருத்தத்திற்கும், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திருத்தங்களுடன் கூடிய தேர்தல் முறைக்கும் பல முரண்பாடுகள் உள்ளதாக சிறு கட்சியினரும், சிறுபான்மைக் கட்சியினரும் அபிப்பிராயப்படுகின்றனர். எனவே இம்முரண்பாடுகள் நீக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் விதித்தில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:

மாகாணசபை முறைமை உரிமை போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட...
வலி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவ...
திருமலையில் இன்றும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்...