பாரம்பரியமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது – யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 5th, 2022

பாரம்பரியமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வதை யாரும் தடை செய்ய முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேநேரம் வன ஜீவராசிகள் அல்லது வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களில் குறித்த பாரம்பரிய விவசாய நிலங்களும் மீன்பிடி நிலைகளும் காணப்படுமாயின் சம்ந்தப்பட்ட திணைக்களங்களின் அனுமதியைப் பெற்று  தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.. 

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள், மக்களின் விவசாய நிலங்களை விடுவிப்பது தொடர்பாக துறைசார் அமைச்சர் சி.பி. இரத்நாயக்கா தலைமையில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் குறித்த பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள முடியாமற்போகும் நிலை காணப்பட்டால் அது தொடர்பில் அனுமதிகள் மற்றும் சட்டரீதியான தேவைப்பாடகளை கறித்த பிரதேச செயலரூடாக மேற்கொண்டு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அதேநேரம்  இத்தகைய பகுதிகளில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள செல்லும் போது வீதிகள் குறித்த அசௌகரியங்கள் இருக்குமானாலும் அவற்றையும் இனங்கண்டு பிரதேச செயலர் தமக்கு தகவல்களை வழங்கவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்பதாக வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் இலக்குகளையும் மக்களின் வாழ்வியல் எதிர்பார்ப்புக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் சமந்தப்பட்ட அமைச்சினால் நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘வனக் கிராம்’ எனும் திட்டத்தினை மருதங்கேணி, மணற்காடு பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும் என்று அமைச்சர் சி.பி.இரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கிராமத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளையும் உருவாக்குவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வின்போது மாவட்ட அரச அதிபர்கள், துறைசார் அதிகாரிகள் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க தவறியமையே நாட்டில் அசம்பாவிதங்கள் தொடர காரணம் – நாடாளும...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ...
தேசிய ரின் மீன் உற்பத்தி நாட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது – சபையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!