காலம் கடந்த ஞானம் அல்ல…! காலம் அறிந்த ஞானம்…!! – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

Tuesday, October 3rd, 2017

எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றம் இன்று தனது 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த நாடாளுமன்றம் இன்னுமின்னும் தனது ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு போகும். 100ஆவது வருடத்தையும் எட்டிவிடும். சில வருடங்களுக்கு நாங்கள் இருக்கலாம். ஆனால், தொடர்ந்தும் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல்,  இந்த நாடாளுமன்றத்தில் வாத, விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ‘பேசு பொருளாக’ மாத்திரம் இருக்கக்கூடிய நிலை தொடரக் கூடாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சயின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் முதலாவது ஜனநாயக நாடாளுமன்றத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு தினம் விஷேட அமர்வு நாடாளுமன்றில் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகயைிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது நாட்டின் முதலாவது ஜனநாயக நாடாளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இன்றைய தினத்தில், எமது  நாடாளுமன்றம் இந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட 35ஆவது ஆண்டினையும் (1982 – ஏப்ரல்) நாம் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அதாவது, எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றத்தின் வயதில் அரை வாசி வயதினை இந்தக் கட்டிடம் கொண்டிருக்கின்றது.

இந்த 70 ஆண்டுகால வரலாற்றில் எமது நாடாளுமன்றத்தை மக்கள் பிரதிநிதிகள் பலர் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளனர். அந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் நினைவுகூர்ந்தவனாக…

அந்த மக்கள் பிரதிநிதிகளால் எமது மக்களுக்கும், இந்த நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்றப்பட்டிருக்கும் பல்வேறு பணிகள் மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பில் எனது மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், 70 ஆண்டு கால எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக அங்கம் வகித்து வருகின்றேன். தங்களது தேவைகளை, பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்றும், தங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் எமது மக்கள் என்மீது நம்பிக்கை கொண்டு எனக்கு தொடர்ந்தும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், எமது மக்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றேன் என்பதற்கு எமது மக்களின் ஆதரவே சாட்சியாகும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர், தென் பகுதி ஆட்சியாளர்களால் தொடர்ந்திருந்த எமது மக்கள் மீதான புறக்கணிப்புகளும், மாற்றாந் தாய் மனப்பாங்குகளும், தமிழ்த் தரப்பு அரசியல் தலைமைகளின் அணுகுமுறைகளும் காரணமாக,  ஒரு காலத்தில் நாமும் இந்த நாடாளுமன்ற முறைமையில் நம்பிக்கையிழந்து,  ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.

எமது போராட்டத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றியாக நாம் கருதுகின்ற,  இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், தென் பகுதி அரசாங்கமானது மேற்படி ஒப்பந்தம் தொடர்பில் குணாம்ச ரீதியிலான மாற்றங்களைக் காட்டிய நிலையில், நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக ஆயுதப் போராட்டத்தை கைவிட்ட நாம், தேசிய நீரோட்டத்தில் காலடியெடுத்து வைத்தோம். அந்த வகையில் எமது தேசிய அரசியல் பணிகளின் 30ஆவது ஆண்டாகவும் இந்த ஆண்டு திகழந்து கொண்டிருக்கின்றது.

நாங்கள் தேசிய நீரோட்டத்தில் பிரவேசித்திருந்த காலகட்டமானது, வடக்கில் சிவில் நிர்வாக அடையாளங்களே அற்றுப் போயிருந்த ஒரு நெருக்கடியான கால கட்டமாக இருந்தது. அந்த நிலையில், யாழ் குடாநாடு முதற்கொண்டு வடக்கிலும், கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் சிவில் நிர்வாகக் கட்டமைப்பினை மீளக் கட்டியெழுப்புவதற்கும், ஜனநாயகப் பண்புகளை மீள உயிர்ப்பிப்பதற்கும் எங்களது இந்த அரசியல் பிரவேசம் வழிவகுத்தது என்பதை எமது மக்களும், வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தென் பகுதி அரசியல் தலைமைகளும் மறந்திருக்க மாட்டார்கள்.

அதே போன்று, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்பி, அதன் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்பும் எமது கொள்கை ரீதியலான உழைப்பும், அன்று தொடக்கம் இன்று வரை முன்னேற்றகரமான வழியிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் கடினமானதொரு இலக்கு என்ற போதிலும், எமது அணுகுமுறைகள் மூலமாகவே நாம் இதில் வெற்றியீட்டி வருகின்றோம்.

இந்த வழிமுறையானது எமக்கான வாக்குகளில் கடந்த காலங்களில் தற்காலிக பின்னடைவைக் கொண்டிருந்த போதிலும், ஒரு முற்போக்கான சமூகத்தை எமது மண்ணில் உருவாக்கும் எமது முயற்சியினை சுயலாப அரசியல் தேவைகள் கருதி நாம் கைவிடாமல், தொடர்கின்றோம்.

தமிழ் மக்கள் இலங்கையராக இருக்கவேண்டும் என்பதற்காக தமிழர் என்ற அடையாளத்தையோ அன்றி தமிழராக இருக்கவேண்டும் என்பதற்காக இலங்கையர் என்ற அடையாளத்தையோ இழக்கத்த தயாரில்லை. அவர்கள் தமிழராகவும் அதே நேரம் இலங்கையராகவும் இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால் கடந்தகால தமிழ் சிங்கள இனவாதத் தலைவர்கள் தவறாக அதை புரிந்தகொண்டதனாலேயே இன்று நாடு  பல அழிவுகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான தொடர்ந்து வருகின்ற தென் பகுதி அரசுகளில் குணாம்ச ரீதியிலான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, இது இலங்கை அரசு என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளன. இருந்தும், எமது மக்கள் சார்ந்த பிரச்சினைகள், தேவைகள் பல இன்னும் தீர்க்கப்பட வேண்டிய நிலையில் காத்திருக்கின்றன என்பதை நான் மீண்டும் சுட்டிகாட்ட வேண்டியுள்ளது.

எமது மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படாமைக்கு தென் பகுதி அரசுகள் மாத்திரம் காரணமல்ல. தமிழ்த் தரப்பு அரசியல் தலைமைகளும் இதற்கு பொறுப்பு கூறியே ஆக வேண்டும் என்பதை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன்.

தென் பகுதி அரசுகள், தமிழ் பேசும் மக்களுக்கு தானாக முன்வந்து செய்கின்ற பணிகளும் இருக்கின்றன. அவை, பொதுவான பணிகள் என்ற வகைக்குள் அடங்கும். அதையும் தாண்டி, தமிழ் பேசும் மக்களது தனித்துவமான – உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், தமிழ் மக்களால் அதற்கெனத் தேரந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள், தங்களது அக்கறை, ஆற்றல், விவேகம், அர்ப்பணிப்புகளின் மூலமாக தென் பகுதி அரசுகளின் அவதானங்களை வென்று, எமது மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தீர்க்கின்ற பொறிமுறைக்குள் தென் பகுதி அரசாங்கங்களை கொண்டு சென்று தீர்வுகளை எட்டியிருக்க வேண்டும்.

இது, கடந்த கால தமிழ் அரசியல் தலைமைகளாலும் சாத்தியமாகாமல் போய்விட்டது, நிகழ்கால தமிழ் அரசியல் தலைமைகளாலும் அது, சாத்தியமாக்கப்படாமல் போய்விடுமோ என்ற சந்தேகம், அச்சம் இன்று எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் ஊடாக எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப எமக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் எமது மக்களின் நலன் கருதியும்,  எமது பகுதிகளினது வளர்ச்சி கருதியும் நாம் மிகச் சரியாகவே பயன்படுத்தி வருகின்றோம். அத்துடன்,  எமக்குக் கிடைத்த அமைச்சுக்களின் ஊடாக எமது மக்கள் உள்ளிட்ட இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும், அனைத்துப் பகுதிகளுக்கும் அந்தந்த அமைச்சுகளின் வரையறைகளுக்கு ஏற்ப  எம்மாலான பணிகளை நாம் செவ்வனே நிறைவேற்றியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் தென் பகுதி அரசுகளுடன் இணக்க அரசியல் ரீதியில் பங்கெடுத்திருந்த நான், எமது மக்கள் சார்ந்த பிரச்சினைகள், தேவைகள், எமது பகுதிகளின் தேவைகள் தொடர்பில் அந்தந்த அரசத் தலைவர்களின் அவதானங்களுக்கு கொண்டு சென்று, அவற்றை இயலுமான அளவில் தீர்த்து வைத்துள்ளேன். குரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்தும் வந்திருக்கின்றேன். தற்போதைய நிலையில், அரசுக்கு வெளியில் இருந்து நான் செயற்பட்டு வருவதால், எமது மக்களது தேவைகள், பிரச்சினைகள், எமது பகுதிகளின் தேவைகள் மட்டுமின்றி, நாடாளவிய ரீதியிலான தேவைகள், பிரச்சினைகள் குறித்து இந்த நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றேன். அதற்கான பலன் கிடைக்கப் பெறுவதையிட்டு, பொறுப்பான தரப்பினருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதே போன்று, எமது மக்கள் நலன்சார்ந்து நான் முன்வைக்கின்ற விடயங்கள் தொடர்பில் உடனடி அவதானங்களைச் செலுத்தி, அவற்றுக்கானத் தீர்வுகளை எட்டுவதில் ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்களதும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களதும் தலைமையிலான இந்த அரசாங்கம் காட்டி வருகின்ற அக்கறை குறித்தும் இந்தச் சந்த்ரப்பத்தில் நான் பாராட்டியாக வேண்டும். அந்த வகையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் நாம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் செய்த எமது மக்கள் நலன்சார் பணிகள் குறித்தும், தற்போது நாம் இந்த நாடாளுமன்றத்தின் ஊடாகக் குரல் கொடுத்து செய்வித்து வருகின்ற மக்கள் நலன்சார் பணிகள் குறித்தும் அறிந்தும், அறியாதவர்கள் போல் நடிப்பவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்று நாம் குரல் எழுப்புகின்ற நிலையில், இது ‘காலம் கடந்த ஞானம்’ என எம்மை விமர்ச்சிக்கின்றனர்.  இது, ‘காலம் கடந்த ஞானமல்ல’. ‘காலம் அறிந்த ஞானம்’ என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

எமது இத்தகைய மக்கள் நலன்சார்ந்த உழைப்புகளும், அதற்கான அர்ப்பணிப்பகளும்தான் சக தமிழ் அரசியல் தலைமைகளுக்கு எம்மீதான அரசியல் ரீதியிலான அச்சத்தை தோற்றுவித்திருந்தது. இதன் காரணமாக இவர்களும், இந்த அரசியல்வாதிகளால் தூண்டப்பட்ட சிலரும் எம்மீது பல்வேறு அவதூறுகளை, சேறு பூசல்களை கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். இவ்வாறு எம்மீது அபாண்டங்களை சுமத்தியவர்களுக்கு இந்த நாடாளுமன்றத்தை தொடர்ந்து பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வாய்ப்பினை எமது மக்கள் வழங்கியிருக்கவில்லை. ஏனெனில், எமது மக்களுக்கு, உண்மையானவர்கள் யார்? என்பதை எமது மக்கள் நன்கறிவார்கள். இதன் காரணமாகவே என்னால் தொடர்ந்து 23 ஆண்டுகள் இந்த நாடாளுமன்றத்தை, எமது மக்களின் வாக்குகளால் பிரதிநிதித்துவப்படுத்த இயலுமாகவுள்ளது.

அதே போன்று, அன்று எம்மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களுக்கு காலம் இன்று பதிலளித்து கொண்டிருப்பதையும் அனைவரும் அறியக் கூடியதாகவே இருக்கின்றது.

இவ்வாறு, மாநில ரீதியில் எம்மீதான அரசியல் அச்சம் காரணமாக அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் தூண்டிவிடப்பட்ட அபாண்டங்களை, தேசிய அரசியலிலும் தேசிய கட்சிகளும் தத்தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக் கொண்ட சந்தர்ப்பங்களும் அன்று இல்லாமல் இல்லை. இன்று பிரதான இரு தேசிய கட்சிகளும் இணைந்து ஆட்சி நடந்துகின்ற நிலையில,; அந்த நிலை இல்லாதிருப்பதன் ஊடாக கடந்த காலங்களில் எம்மீது சுமத்தப்பட்டிருந்த அபாண்டங்களின் மூலமான நோக்கங்கள் எவை என்பது பற்றி இந்த நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என எண்ணுகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின் பல்வேறு தேவைகள், பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும், படிப்படியாகவும் தீர்க்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.

இன்று எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றம் தனது 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த நாடாளுமன்றம் இன்னுமின்னும் தனது ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு போகும். 100ஆவது வருடத்தையும் எட்டிவிடும். சில வருடங்களுக்கு நாங்கள் இருக்கலாம். ஆனால், தொடர்ந்தும் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல்,  இந்த நாடாளுமன்றத்தில் வாத, விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ‘பேசு பொருளாக’ மாத்திரம் இருக்கக்கூடிய நிலை தொடரக் கூடாது என்பதை வலியுறுத்தி விடைபெறுகின்றேன்.

Related posts:

நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சர்...
வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு - ஜனாதிபதி ரணிலுக்கு வடக்கு கடற்றொழிலாளர் சார்ப...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூநகரி வலைப்பாடு பிரதேச மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்ற...
வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்கத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் ...
அமைச்சர் டக்ளஸின் அதிரடி நடவடிக்கை - கிளிநொச்சியில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி!