தேசிய ரின் மீன் உற்பத்தி நாட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது – சபையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023

தேசிய ரின் மீன் உற்பத்தியானது நாட்டில் தற்போது மேம்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  2019 ஆம் ஆண்டளவில் சுமார் 05 க்கும் குறைவாக இருந்த ரின் மீன் உற்பத்தித் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது 16 ஆக அதிகரித்துள்ளன. இவற்றைவிட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத ரின் மீன் தொழிற்சாலைகளும் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான சபை வாத – விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.-

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தேசிய அளவில் ரின் மீன் கைத்தொழிலை மேலும் அதிகரிப்பது தொடர்பில் எமது அமைச்சு தொடர்ந்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தேசிய ரின் மீன்களின் உற்பத்திக்கென நாட்டில் மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுகின்றபோது அம் மூலப் பொருட்களை இறக்குமதி செய்கையில் அதற்கென  விசேட இறக்குமதி வரிச் சலுகையினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு, இறக்குமதி ரின் மீன்களுக்கான இறக்குமதி வரியினை அதிகரிப்பதற்கான நடவடிக்கையினையும் எடுத்துள்ளோம்.

ரின் மீன்களை இறக்குமதி செய்கின்றவர்கள் குறைந்த தரமுடைய ரின் மீன்களை இறக்குமதி செய்து சந்தைப்படுத்துவதால், தேசிய ரின் மீன் உற்பத்தியானது சந்தையில் விலைகள் தெடர்பிலான பாதிப்பிற்கு உட்படுகின்றது. இதனை நிவர்த்திக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படுகின்ற ரின் மீன்களுக்கான தரச் சான்றிதழ்களை உற்பத்தி செய்யப்படுகின்ற அந்தந்த நாடுகளிலிருந்து பெறப்பட்டு, லேபலில் குறிப்பிடப்பட வேண்டும் என்ற நடவடிக்கையினை எடுத்து வருகின்றோம்.

மூலப் பொருளாக இறக்குமதி செய்யப்படுகின்ற புதிய, உறைந்த மீன்களுக்கான மொத்த ஆர்சனிக் அளவுக்கு பதிலாக கனிம ஆர்சனிக் அளவினை புதுப்பிப்பது தொடர்பிலும், சோதனை மற்றும் பரிசோதனை செயல் முறையை எஸ். எல். எஸ் ஐக்கு ளுடுளுஐ மாற்றுவது தொடர்பிலும் நாம் அவதானமெடுத்து வருகின்றோம்.

தேசிய மட்டத்தில் ரின் மீன்களை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். குறிப்பாக, சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலமாக சந்தைப்படுத்தவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், படையினர் போன்ற அரச நிறுவனங்களுக்கு விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதே நேரம், தரமற்ற ரின் மீன்களைத் தயாரிக்கின்ற, விற்பனை செய்கின்ற தொழிற்சாலைகளை தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

தேசிய ரின் மீன் உற்பத்தியாளர்களை அடிக்கடி சந்தித்து, அவர்களது பிரச்சினைகளைக் கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்து வருவதன் மூலம் இக் கைத்தொழிலை மேம்படுத்தி வவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: