தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, November 23rd, 2017

தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கென மத்திய அரசினால் செலுத்தப்பட வேண்டிய அக்கறை செலுத்தப்படுவதில்லை. அலட்சியப் போக்கே கடைப்பிடிக்கப்படுகின்றது என்ற வாதம் சரியானதென்றே தோன்றுகின்றது – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி, கலாசார அலுவல்கள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலம் தெரிவிக்கையில் –

எமது நாட்டில் 3000 தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் உள்ள நிலையில், தமிழ் மொழி மூலமாக முஸ்லிம் மாணவர்கள் உட்பட சுமார் 10 இலட்சம் பேர் கல்வி கற்று வருகின்றனர். தமிழ் மொழி மூலமாக சுமார் 70 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்வி அமைச்சின் பிரதான கடமைகள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் மேற்படி பாடசாலைகளுடனும், மாணவர்களுடன் தொடர்புடையவையாகும். குறிப்பாக, கல்வி தொடர்பான நியமனங்களையும், தராதரங்களையும் உருவாக்குதல், ஒருமைப்பாடான கல்வித் தராதரங்களை ஏற்படுத்துதல், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் – மேம்படுத்தல், 350 தேசிய பாடசாலைகளை நிர்வகித்தல் போன்ற விடயங்கள்.

இந்த நிலையில், மேற்படி அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவதற்கு கல்வி அமைச்சில் போதிய தமிழ் அதிகாரிகள் இல்லை என்றே தெரிய வருகின்றது.

கல்வித் தராதரங்களைப் பேணுகின்ற பொறுப்பு மத்திய கல்வி அமைச்சுக்கு உரியது. இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பாட வகைப்படியான மத்திய அதிகார பீடங்களில், மேற்படி 3000 தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் இடம்பெறுகின்ற கல்விச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு தேவையான தகுதிவாய்ந்த தமிழ் அதிகாரிகள் இல்லை என்றே தெரிய வருகின்றது.

கல்வி அமைச்சில் சுமார் 60க்கும் மேற்பட்ட பிரிவுகள் இருக்கின்ற நிலையில், ஆரம்பக் கல்விப் பிரிவு, தமிழ் மொழிப் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவு, கல்வியல் கல்லூரிப் பிரிவு, தமிழ் மொழிப் பாட விரிவுப் பிரிவு, தோட்டப் பாடசாலைப் பிரிவு போன்;ற 05 பிரிவுகளில் மாத்திரமே தமிழ் மொழி மூல அதிகாரிகள் இருக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது.

கல்வி அமைச்சில் 03 முஸ்லிம்களும், 01 தமிழருமே கல்விப் பணிப்பாளர்களாக இருக்கின்றனர் என்றும் தெரிய வருகின்றது.

விஞ்ஞானம், கணிதம், சுகாதாரம், புவியியல், வலராறு போன்ற பாடங்களுக்கென தமிழ் அதிகாரிகள் எவரும் இல்லை எனக் கூறப்படுகின்றது. குறைந்தபட்சமாக, இவற்றுக்கென தமிழ் பிரதிப் பணிப்பாளர்களாவது நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

சிங்கள மொழி மூல அதிகாரிகளுக்கு தமிழ் மொழி மூலமான பரிச்சயமே அற்ற நிலை காணப்படுகின்றது. இத்தகைய நிலையில், இவர்களால் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் மேற்படி பாடங்களின் மேம்பாடு தொடர்பில் கண்காணிக்க முடியுமா? இவர்களால் வழங்கப்படக்கூடிய வழிகாட்டல்கள் எத்தகையது? நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் மேற்படிப் பிரிவுகளுக்கு தமிழ் அதிகாரிகள் இல்லாத நிலையில், இப் பிரிவுகளால் எவ்விதமான பயன்களும் இல்லை என்ற நிலையே காணப்படுகின்றது.

இந்த நிலையில், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கென மத்திய அரசினால் செலுத்தப்பட வேண்டிய அக்கறை செலுத்தப்படுவதில்லை. அலட்சியப் போக்கே கடைப்பிடிக்கப்படுகின்றது என்ற வாதம் சரியானதென்றே தோன்றுகின்றது.

எனவே, உரிய தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு ஏற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படாவிட்டால், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தராதரத்திற்கு நேர்ந்துள்ள பாதிப்பை ஈடு செய்ய முடியாது. கல்வி அமைச்சினால் சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் கண்காணிக்கப்படுகின்ற வகையிலான கண்காணிப்புகளே தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் தேவை என்பதுடன் இத்தகைய தவறுகள், புறக்கணிப்புகள், கண்டுகொள்ளாத நிலைமை எங்கிருந்து, எப்படி ஆரம்பிக்கின்றது? என்பதை ஆராய்கின்றபோது, எமது நாட்டில் தமிழ் மக்களது கல்வி தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து கல்வியியல் வளவாளர்கள் தெரிவிக்கின்ற சில கருத்துக்களை இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன் – என்றார்.

Untitled-6 copy0000

Related posts:


நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம்!
சிந்திப்பதை நிறுத்திய தோழர் சங்கரையாவிற்கு சிரம்தாழ்ந்த அஞ்சலி மரியாதை – இரங்கல் செய்தியில் அமைச்சர்...
திருமுறுகண்டி பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் திருப்திகரமாக அமையவில்லை - அமைச்சர் டக்ளஸ் அதி...