நிவாரணங்கள், நட்டஈடுகள் என்பன உரிய காலகட்டத்திற்குள் வழங்கப்பட வேண்டும்!

Friday, September 15th, 2017
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கான நிவாரண உதவிகள் மற்றும் நட்டஈடுகள் என்பன பாதிப்புற்ற மக்களுக்கு உரிய காலகட்டத்திற்குள் வழங்கப்படாதவிடத்து, அம் மக்கள் மீண்டுமொரு இயற்கை அனர்த்தத்திற்கு உட்படுகின்ற நிலையில் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்ற நிலை எமது நாட்டில் தொடர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், அண்மைக் காலமாக எமது நாட்டில் மழை, வெள்ளம், கடும் வரட்சி, மீண்டும் மழை, வெள்ளமென தொடர் கால நிலை மாற்றங்களால் வாழ்வாதாரங்கள் இழக்கப்படுகின்ற நிலையில் எமது மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதாக அரச தரப்பில் கூறப்படுகின்ற போதிலும், அந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சென்றடையாத நிலைமைகளையும், அவை போதியளவுகளில் இல்லாத நிலைமைகளையும், காலம் தாழ்த்தி கிடைக்கின்ற நிலைமைகளையும் காணக்கூடியதாகவுள்ளது.
நட்ட ஈடுகள் வழங்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் மற்றும் தொகை மதிப்பீடுகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அவை உரிய காலத்திற்குள் வழங்கப்டாத நிலைமைகளையும் காணக்கூடியதாகவுள்ளது. அந்த வகையில், கடந்த வரட்சி காலத்தின்போது பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ள காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு இதுவரையில் குறிப்பிட்ட நட்டஈடுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிய வருகின்றது.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக வீடுகளை இழந்துள்ள  பல குடும்பங்கள் பல வருடங்களாகியும் வீடுகளுக்காகப் போராடி வருகின்றனர். சாலாவ இராணுவக் களஞ்சிய வெடிப்பு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நட்டஈடுகளைக் கோரி இன்னமும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, இத்தகைய அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய தீர்வுகள் விரைந்து எட்டப்பட வேண்டியது அவசியமாகும் என்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்க்ள காரணமாகப் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உரிய காலகட்டத்திற்குள் நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கு ஒரு நெறிமுறை உருவாக்கப்படுவது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
குற்றவாளிகளை நாட்டுக்குள் கொண்டுவரும் நிலையான சட்டங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலிய...
ஊர்காவற்துறை - காரைநகர் போக்குவரத்து தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அவதானம் - விரைவில் சேவைகளை ஆரம்பிக்க ...