நாடு உல்லாசப் பிரயாணத் துறையின் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, May 23rd, 2019

கடந்த ஒரு தசாப்த காலத்திற்குள் வர்த்தக ரீதியலான நம்பிக்கையானது இந்த நாட்டில் மிகப் பாரிய வீழ்ச்சி நிலையை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே கண்டுள்ளதாக புள்ளவிபரங்கள் கூறுகின்றன. இது,  பின்னரான காலங்களில் மேலும் வீழ்ச்சி நிலையினை அடையக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்ற நிலைமையில், அரசாங்கம் மிக அவதானமான முன்னெடுப்புகளை வீழ்ச்சியுற்ற மற்றும் ஸ்தம்பித்துள்ள துறைகள் சார்ந்து – குறிப்பாக பொரளாதாரத்தின் முக்கிய துறைகள் சார்ந்து மேற்கொள்ள வேண்டியத் தேவை இருக்கின்றது.

2018ஆம் ஆண்டின் மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம், 2017ஆம் ஆண்டில் நூற்றுக்கு 3.4 வீதமாக இருந்துள்ள பொருளாதார வளர்ச்சியானது கடந்த வருடத்தில் 3.2 வரையில் வீழ்ச்சி கண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன், கடந்த ஆண்டில் 4.4 டொலர் பில்லியனாக இருந்துள்ள உல்லாசப் பிரயாணத்துறையின் வருமானமானது இந்த வருடத்தில் 1.5 டொலர் பில்லியன்களால் வீழ்ச்சியுறக் கூடும் என எதிர்வுகள் கூறப்படுகின்றன.

இந்த நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற மூன்றாவது முக்கிய துறையான உல்லாசப் பிரயாணத் துறையின் வீழ்ச்சியானது அந்நியச் செலாவணி ஈட்டலில் பெரும் பாதிப்பினை உண்டு பண்ணக்கூடும்.

தற்போது கிடைக்கின்ற தகவல்களைப் பார்க்கின்றபோது, அநேகமான ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளை ஒதுக்கீடு செய்கின்ற ஏற்பாடுகள் எதிர்வரும் ஒக்ரோம்பர் மாதம் வரையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அதேநேரம், வெளிநாட்டு முதலீடுகளிலும் பாரிய வீழ்ச்சி நிலையே காணப்படுகின்றது. மத்திய வங்கியின் அறிக்கை பிரகாரம் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலின் பின்னர் 3.3 பில்லியன் ரூபா நாட்டுக்கு வெளியில் சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. அதையும் இணைத்து பார்க்கின்றபோது, இதுவரையில் சுமார் 10 பில்லியன் ரூபா ஆவணமய முதலீடுகள் வெளியில் சென்றுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளையில், இந்த வருடத்தின் வெளிநாட்டுக் கடன்கள், 5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ள நிலையில், அதில் 1.5 பில்லியன் டொலர்களை செலுத்துவதற்காக இந்தியாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் கடன்கள் பெறப்பட்டுள்ள நிலையில், சிதைவடைந்துச் செல்கின்ற  வெளிநாட்டு சொத்துக்களுக்கு முண்டு கொடுப்பதற்கென கடந்த மார்ச் மாதம் மேலும் 2.4 டொலர் பில்லியன் அரச பிணைமுறிகள விற்பனை மூலமாகப் பெறப்;பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அந்த வகையில் பாரக்கின்றபோது, மிகவும் அவதானமானதொரு பயணத்தின் தேவையையே விரைவானதாக நாடு எதிர்கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

ஒரு பக்கத்தில் கடன் செலுத்துகைகளுக்காக மேலும் கடன் பெற வேண்டிய நிலையிலேயே இருந்து வருகின்ற நிலையில், தேசிய உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பிலான முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியங்கள் மிகையாகவே ஏற்பட்டிருக்கின்றன.

அந்நியச் செலாவணியின்  பிரதான வழிகளான உல்லாசப் பிரயாணத்துறையின் வீழ்ச்சி என்பது பெரும் பாதிப்பினை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்ற அதே நேரம், வெளிநாட்டு முதலீட்டாளர்களது பங்களிப்புகள் தொடர்பிலும் வலுவான எதிர்பார்ப்புகளை கொள்வதற்கு இயலாது என்றே தற்போதைக்கு கூற வேண்டியுள்ளது.

எனினும், காலப் போக்கில் இத்துறைகள் விருத்தி பெற வேண்டுமாயினும், அதற்குரிய ஏற்பாடுகள் இப்போதிருந்தே துரித கதியில் மேற்கொள்ளப்படவும் வேண்டியிருக்கின்றது என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

Related posts: