இயற்கை அனர்த்தம் வேதனை தருகிறது! இலங்கை அரசு, இந்தியா உட்பட வெளிநாடுகளினதும், எமது மக்களினதும் மனிதாபிமான உதவிகள் ஆறுதல் அளிக்கின்றன! –  டக்ளஸ் தேவானந்தா

Monday, May 23rd, 2016

நாட்டில் ஏற்பட்ட அண்மைக்கால இயற்கை அனர்த்தமானது மிகவும் வேதனை தருவதாகவும், இதிலிருந்து எமது மக்களை மீட்டெடுக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உடனடி நடவடிக்கைகளும், எமது மக்களினதும், இந்தியா உட்பட்ட வெளிநாடுகளின் மனிதாபிமான உதவிகளும் ஆறுதல் அளிப்பவையாக அமைந்துள்ளன என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், நாட்டில் அண்மையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தமானது அரனாயக்க பகுதியில் மூன்று கிராமங்களையே மூடிவிட்டது. அது தவிர நாட்டின் அனைத்து பகுதிகளிலுமாக பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்த எமது மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே நேரம், காணாமற்போன மக்களைக் கண்டு பிடிக்கவும், இடம் பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்கும் துரிதமானதும் தொடரானதுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் இத்தகைய கோரமான இயற்கை அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிப்புகளிலிருந்து எமது மக்களைக் காப்பாற்ற மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை. அத்துடன், இம்முறை வெசாக் தின நிகழ்வுகளையும் அமைதியான முறையில் அனுஷ;டித்து, அதற்கு செலவிட இருந்த நிதியையும் சேர்த்து சிங்கள மக்களும், ஏனைய தமிழ்,  முஸ்லிம் மக்களும் இணைந்து எவ்வித பாகுபாடுகளுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிவருகின்ற மனிதாபிமான பணிகள் வியந்து பாராட்டத்தக்கன.

அதே நேரம், எமது அண்டைய நேச நாடாகிய இந்தியா பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பாரிய உதவிகளை உடனடியாகவே வழங்கியுள்ளது. அதே போன்று, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அதற்காக இந்த நாடுகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையில் இனிவரும் காலங்களில் இவ்வாறான இழப்புகளைத் தவிர்க்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய ஒரு பாடத்தையே இந்த இயற்கை அனர்த்தம் எமக்கு கற்பித்துள்ளது. இதனை அவதானத்தில் கொண்டு எதிர்கால செயற்பாடுகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

23

Related posts:

மீண்டும் அமைச்சுப் பெறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழ் மக்கள்!
வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாடசாலை கல்விச் சமூகம்...
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்...
ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கின்றது சைக்கிள் கட்சி: அமைச்சர் டக்ளஸிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!
தமிழர் தேசம் மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தை உருவாக்குவோம் – வடமராட்சியில் அமைச்சர்...