நந்திக் கடலை புனரமைத்தால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் – டக்ளஸ் தேவானந்தா

Friday, July 7th, 2017

முல்லைதீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைதீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சுமார் 4,600க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத் தொழிலில் ஈடுபட சுமார் 73 கிலோ மீற்றர் நீளமான கடற்கரையோர பகுதியே காணப்படுகின்றது. இந்த பகுதிக்குள் நுழைந்து வெளி மாவட்ட கடற்றொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட முறைமைகளைக் கொண்டதும், அத்துமீறியதுமான தொழில்களில் ஈடுபட்டு வருவதாக அம் மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அந்தவகையில், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறுசாலை போன்ற பகுதிகளில் வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட கடற்nhறழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இம் மக்கள் தங்களது பாரம்பரிய முறைகளில் தொழில் செய்து வருகின்ற கொக்கிளாய் ஆறு, முகத்துவாரம், புளியமுனை ஆகிய பகுதிகளில் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் என்பன பயன்படுத்தப்படுவதால் இப்பகுதிகளில் நீர்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் இம் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை புனரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை காரணமாகவும் அம் மாவட்ட கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிப்படைந்தள்ளன. இலங்கையில் இறால் பெருக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்ற நந்திக் கடலை புனரமைப்பு செய்வதன் ஊடாக இப்பகுதி மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும், அதே நேரம் எமது நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பாரிய பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாகும்.

அத்துடன், முல்லைத்தீவைப் பொறுத்த வரையில் வெளிச்ச வீடு அற்ற நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியும், திசைமாறிச் செல்கின்ற நிலைமைகளும் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, இவ்விடயங்கள் குறித்து கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் விசேட அவதானங்களைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts: