நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, April 5th, 2019

வடக்கிலே எமது மக்கள் இந்த நாட்டில் ஏனைய மக்களைப் போல் வாழ்வதற்காக மிக அதிகமான துன்ப, துயரங்களையே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தெற்கிலே எமது மக்கள் வாழ்வதற்காக மிக அதிகமான துன்ப துயரங்களையே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இரு தரப்பு மக்களையும் இனவாதம் என்கின்ற ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு, ஒரு சிலர் மாத்திரம் ஆண்டு, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலைமைகளே தொடர்கின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது மக்களது பல்வேறு பிரச்சினைகளையும் தீர்க்கப் போவதாகக் கூறியே, எமது மக்களின் வாக்குகளை அபகரித்து, அதிக எண்ணிக்கையினாலான உறுப்பினர்கள் தமிழ்த் தரப்பு சார்ந்து இந்த சபைக்கு வந்தனர். இங்கு வந்ததும், அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற இந்தத் தமிழ்த் தரப்பினர் விரும்பியிருந்தால் எமது மக்களது பல பிரச்சினைகளையும் தீர்த்திருக்க முடியும்.

ஆனாலும், வாக்களித்த எமது மக்களை மறந்துவிட்டு, தங்கள், தங்களது வாழ்க்கையினை மாத்திரமே அரசுடன் பேரம் பேசி அவர்களால் பெற்றுக் கொள்ள முடிகின்றதே தவிர, எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேரம் பேசுவதற்கு அவர்களது வாய்கள்; அடைத்துக் கொள்கின்றன.

நிபந்தனையுடன் ஆதரவு வழங்குகின்றோம் – நிபந்தனையுடன் ஆதரவு வழங்குகின்றோம் என்று அடிக்கடி கூறுகின்ற இவர்கள், என்ன நிபந்துனையுடன் ஆதரவு கொடுக்கிறோம் என ஒரு போதும் வெளியில் கூறுவது கிடையாது. யாராவது கேட்டால், அது ராஜதந்திரம் என்பார்கள். இவர்களது ராஜதந்திரமானது எமது மக்களை ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் விட்டிருந்தது.  இப்போது எஞ்சியிருக்கின்ற மக்களை நடுக் கடலில் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.

இப்போது, தங்களால் சிந்தித்துக்கூட எதையேனும் கூற முடியாத வங்குரோத்து நிலையும் இந்தத் தமிழ்த் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் அப்போதிருந்து எதையெல்லாம் கூறி வருகின்றோமோ, எதை எல்லாம் இந்த அரசு செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றோமோ, அதை எல்லாம் இப்போது மனப்பாடம் செய்துகொண்டு, மறுபடி கூறி வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் உண்மையிலேயே எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என எண்ணியிருந்தால், எப்போதோ எமது மக்களின் பிரச்சினைகள் தீர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன்? இந்த ஆட்சியிலே கூட தீர்த்திருக்கலாம். இந்த அரசுக்கு இன்றும்கூட ஆதரவாக நின்று இந்த அரசசைக் காப்பாற்றவே இவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், அதன் ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என நினைப்பதில்லை.

நான் பத்து நிமிடங்கள் கதைத்தால், அதில் ஐந்து நிமிடங்கள் இவர்களைக் குறை கூறுவதாகவே இவர்கள் கூறி வருகின்றனர். ஐந்து நிமிடங்கள் மட்டுமல்ல, எமது மக்களின் வரலாற்றுக் காலம் வரையிலும் குற்றம் கூறுமளவிற்கே இவர்கள் எங்கள் மக்கள் தொடர்பில் நடந்து கொள்கிறார்கள்; என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

எமது மக்களுக்கு வாக்குறுதிகள் பலவற்றை அளித்துவிட்டு, அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றாமல், எமது மக்களை ஏமாற்றியே இவர்களது வயிறுகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இன்று எமது மக்கள் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தொடர்ந்து இருந்து வருகின்ற பல்வேறுபட்ட அடிப்படை, அன்றாட மற்றும் உணர்வு ரீதியிலான பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வாழ்வா? சாவா? என்ற நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

Related posts:


தேசிய அரசியல் நீரோட்டத்தை எமது மக்களுக்காக பயன்படுத்துவதில் வெற்றி கண்டவர்கள் நாம் - டக்ளஸ் தேவானந்...
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது - டக்ளஸ் தேவானந்தா சபையில் வலிய...
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக காவல் பணியாளர்கள் இருவர் நியமனம் – கடிதங்களை வழங்கிவைத்தார் கடற்றொழில் ...