தேசிய பாதுகாப்பிற்கும் தமிழ் மக்களது காணிகளுக்கும் என்ன சம்பந்தம் – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

யுத்தம் நிலவிய காலப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட எமது மக்களின் காணி, நிலங்களில் இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் காணி, நிலங்களுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் இடையில் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புடன் எமது மக்களது காணி, நிலங்களைத் தொடர்புபடுத்தி இவ்வாறான கருத்துக்களைக் கூறி, எமது மக்களது சொந்த காணி, நிலங்களை தொடர்ந்து முடக்கி வைத்திருப்பதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யுத்தம் நிலவிய காலப்பகுதியில் எமது மக்களது காணி, நிலங்கள் பாதுகாப்புப் படைகளினால் கையகப்படுத்தப்படடிருந்தாலும், தற்போது யுத்தம் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்;பட்டு, பல வருடங்கள் கழிந்துள்ள நிலையில், மீண்டும் இந்த நாட்டில் யுத்தமொன்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நான் நம்பவில்லை. சுயலாப அரசியல் மற்றும் இனவாதம் கருதி ஒரு சிலர் இந்த நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வருமென கூறி வருகின்றனர் என்பதற்காக எமது மக்களின் காணி, நிலங்களை அதற்கு காவு கொடுக்க முடியாது.
எமது மக்கள் வாழ்வதற்காகவும், தங்களது வாழ்வாதாரங்களை முன்னெடுப்பதற்காகவுமே தமது காணி, நிலங்களைக் கோரி போராடி வருகின்றனர். இந்த காணி, நிலங்கள் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. எமது மக்களது வாழ்க்கையுடன் உணர்வு ரீதியாகப் பின்னிப் பிணைந்தவை. எனவே, இவற்றை எமது மக்களுக்கென விடுவித்து, பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்ற அம் மக்களை நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டியது இந்த அரசின் பொறுப்பாகும்.
அதே நேரம், தேசிய பாதுகாப்பு கருதி படைகள் அங்கு நிலைகொள்ள வேண்டுமாயின், அதற்கேற்ப, அவ்வப் பகுதிகளின் மக்கள் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்ற வகையில் படைகள் நிலைகொள்வதற்கு பொருளாதார வளங்கள் குன்றிய, அரச தரிசு நிலங்கள் பெருந் தொகையில் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறான நிலைமைகள் இருக்கின்றபோது, எமது மக்களின் சொந்த காணி, நிலங்களுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் முடிச்சுப் போட்டுக் கொண்டு, காலத்தை இழுத்தடிக்கக் கூடாது.
எமது மக்களது பிரச்சினைகள் எந்தளவுக்கு சுமுகமாகத் தீர்க்கப்படுகின்றவோ, அந்தளவுக்கு விரைவாக இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் உட்பட அனைத்து விடயங்களையும் முன்னெடுக்க முடியுமென டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிவாரணங்கள், நட்டஈடுகள் என்பன உரிய காலகட்டத்திற்குள் வழங்கப்பட வேண்டும்!
வடக்கிற்கான போக்குவரத்தில் போதிய பஸ் வண்டிகள் இணைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
நாற்புறமும் கடலிருந்தும் மீன்பிடித்துறை மேம்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
|
|