நாற்புறமும் கடலிருந்தும் மீன்பிடித்துறை மேம்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019

இலங்கை, கடலால் சூழப்பட்ட தீவு என பெருமிதமாக பேசப்படுகின்றது. ஆனாலும் நாம் இன்னும் மீன் அறுவடையில் தன்னிறைவு அடையவில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட தீவுகளை கொத்துக் கொத்தாக கொண்ட மாலைதீவு நாட்டில், அவர்கள் சர்வதேச மட்டத்தில் மீன் ஏற்றுமதியில் எம்மைவிட முன்னணியில் திகழ்கின்றனர். உல்லாச பிரயாணிகளினால் கிடைக்கின்ற அந்நிய செலாவணியை விட கூடிய வருமானத்தை மீன் ஏற்றுமதியில் பெறுகின்றனர்.

மாலைதீவு கண்டப்பரப்பு சுமார் 400 கிலோமீற்றர் விஸ்தீரணம் உள்ளது. நம் நாட்டை பொறுத்த வரையில் அது 20 கிலோமீற்றர் வரையிலாகும். பெரிய அளவிலான மீன் அறுவடைக்கு நாம் பெரும் கடலுக்கு செல்ல வேண்டும். நம்மவர்கள் சின்ன வள்ளங்களையே பாவிக்கின்றனர். 50பாகத்திற்கு மேலான ஆழத்தில் உள்ள மீன் வளங்கள் பிடிக்கப்படுவதில்லை. சூரை போன்ற பெரிய மீன்கள் பிடிக்க முடிவதில்லை. அந்நிய நாட்டவரினாலேயே இப்பாரிய மீன்கள் பிடிபடுகின்றன. அவர்களிடம் உள்ள இழுவைத் தொழில்நுட்பம், குளிர்சாதன வசதி, பெருங்கடல் பயண உபாயங்கள் எம்மிடம் இல்லை. இந்த வசதிகளை கொண்ட கப்பல்கள் ரூபா 35மில்லியன் வரையான பெறுமதி உடையவை ஆகும்.  இவற்றை இங்கு எத்தனை பேரால் பெற்றுக் கொள்ள முடிகின்றது? என்ற கேள்வியே எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஒவ்வொரு மீன்பிடி பயணமும் பல நாட்கள் கொண்டதால் (தங்கு தொழில்) குறைந்த பட்சம் ரூபா 2.5 மில்லியன் செலவீட்டை உள்ளடக்கும். ஆகவே, கப்பல் மட்டுமல்ல பயண செலவும் கொடுக்கப்பட வேண்டும். வடக்கில் கடந்த காலங்களில் துறைமுக வசதி இல்லாமையே பெரிய குறைபாடாக இருந்துள்ளது. மேலும், குடிநீர் வசதி, ஜஸ் கட்டிகள், எரிபொருள், குளிர் அறைகள் போன்ற முக்கிய காரணிகளும் இல்லாமையும் கவனிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், இப்போது இவ் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டாலும் பயணச் செலவு பெறுவதில் சிக்கல் உள்ளது.

புள்ளிவிபரக்கணக்கின் படி 1981 இல் இருந்து 30வருட யுத்த காரணமாக மீன்பிடியில் பெரும் வீழ்ச்சிக்கே நாம் முகம்கொடுத்து வந்தோம். நாம் எமது வளங்களை உபயோகப்படுத்தாமையினாலேயே இந்திய மீனவர்களின் ஊடுருவல் வலுப்பெற்றது. பின் மீனவர்களுக்கான உபகரணங்கள் கொடுக்கப்பட்டாலும், மீன்பிடித்துறையில் இன்னுமும் வீழ்ச்சியே காணப்படுகின்றது. பல்வேறு அமைச்சர்களும் பலவிதமான மூல உபாயத்தை பிரயோகித்தனர். கௌரவ அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா மீனவ கூட்டுறவுச் சங்கங்களை அமைத்தார். ஆனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கௌரவ இந்திக குணவர்த்தன அமைச்சர் உள்ளக கட்டமைப்புக்களையும் பயிற்சி கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்தார். கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்புடனான 05 அத்தியட்சகர் கொண்ட நிறுவனங்களை ஏற்படுத்தினார். அதன் பின் வந்த கௌரவ ராஜித சேனாரத்ன அமைச்சர்  கிராமிய மீன்பிடி நிறுவனங்களை நிறுவினார். இவ் ஏற்பாடுகள் வெற்றி அளிக்கவில்லை என நான் கூறவரவில்லை. காலப்போக்கில் இவற்றை தக்க வைப்பதற்கான முயற்சிகள் இங்கே முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றேன்.

Related posts:


கடந்தகால அனுபவங்கள் எதிர் காலத்திற்கான திறவுகோலாக இருக்கவேண்டும் - நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
வீட்டுத் திட்டத்திலும் விரும்பாத சர்வதேச சர்ச்சை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!
வவுனியா மாவட்ட மக்களுக்கும் விரையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு – துறைசார் அதிகாரிகளுடனான சந்...