தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் -; செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 21st, 2018

வழக்குகள் தொடரப்படாமலும், வழக்குகள் தொடரப்பட்டு, கால தாமதங்கள் தொடரும் நிலைமையிலும், வழக்குகள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும் பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம,; நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –

எமது நாட்டில் இதுவரையில் தீர்ப்புகள் வழங்கப்படாத நிலையில் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிய வருகின்றது. அதே நேரம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு, வழக்குகள் தொடரப்படாமலும், வழக்குகள் தொடரப்பட்டு, கால தாமதங்கள் தொடரும் நிலைமையிலும், வழக்குகள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும் பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நான் இங்கு தமிழ் அரசியல் கைதிகள் எனக் கூறுகின்றபோது, நீங்கள் ‘அப்படி எவரும் இல்லை’ எனக் கூறலாம். அது உங்களது அரசியல் சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம். அதுவல்ல இங்கு பிரச்சினை. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சுமார் 130 பேர் வரையில் இன்னும் தடுப்பில் இருப்பதாகவே தெரிய வருகின்றது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் மாத்திரம் 78 தமிழ் அரசியல் கைதிகள் தடுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இவர்களில் வழக்குத் தொடரப் படாதவர்களுக்கு வழக்கு தொடர்வதற்கோ, தொடரப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிவுறுத்துவதற்கோ நீங்கள் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைள் என்ன? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இக் கைதிகளின் பிரச்சினைகளின் தீர்வினை விரைவுபடுத்தும் நோக்கில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளை இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கு உறுதி காணப்பட்டிருந்த போதிலும், அந்த வழக்குகள் ஒரு மாதத்திற்கு அல்லது ஒன்றரை மாதத்திற்கு ஒரு தடவை என்ற வகையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதுவும், முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்ற வகையில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாமலும், விசாரணைகளை ஒத்தி வைக்கும் செயற்பாடுகளே தொடர்வதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக வழக்குகள் தாக்கல் செய்யப்படாது, பல வருடங்கள் தடுப்பிலிருந்த அரசியல் கைதிகள், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டும், தண்டனைப் பெற்றவர்களைப் போன்று தொடர்ந்தும் நீண்ட காலம் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Related posts: