அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, October 28th, 2016

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்து, தமிழ் மொழி மூல மாணவர்கள் அதிகமாக வசித்துவரும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாட நெறிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்ஹ அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், எமது நாட்டில், உயர் கல்வியை மேற்கொள்ள இயலாது பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடுவோருக்கும், பாடசாலைக் கல்வியை முடித்து, பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு கிட்டாதோருக்கும் சுயதொழில் முயற்சிகளினூடாக தங்களது எதிர்கால வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் முகமாக பல்வேறு தொழிற் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அரச தொழிற் பயிற்சி நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாடசாலையில் ஒன்பதாம் தரம் வரைக் கற்றவர்களுக்கு, பத்தாம் தரம் வரைக் கற்றவர்களுக்கு, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சையில் கணிதம், தாய் மொழி உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்தவர்களுக்கு என ஆறு மாத காலப் பயிற்சிகள் பத்தும், ஒரு வருட காலப் பயிற்சிகள் நான்கும் மேற்படி அரச தொழிற் பயிற்சி நிலையங்களினூடாக வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் இப் பயிற்சிகளை வழங்குவதற்கென நாட்டில் 38 அரச தொழிற் பயிற்சி நிலையங்கள் செயற்பட்டு வருவதாகவும் மேலும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த, ஏனைய மாகாணங்களில் தமிழ் மொழி மூலமாக தகைமை பெற்ற மாணவர்களுக்கு மேற்படி தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்புகளுக்கான ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிய வருகிறது. குறிப்பாக நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, புத்தளம், கொழும்பு போன்ற பகுதிகளிலுள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாட நெறிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில், மேற்படி பகுதிகளில் தொழிற் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய தகைமைகளைப் பெற்ற தமிழ் மொழி மூலமான மாணவர்கள,; தங்களது எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட ஒழுங்கான பயிற்சிகளைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

எனவே, இந் நிலையை மாற்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலும் தகைமை பெற்ற தமிழ் மொழி மூல மாணவர்கள் மேற்படி தொழில் பயிற்சிகளைப் பெறக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

New-Home-4 copy

Related posts:

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டு...
கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...