எல்லைதாண்டும் கடற்றொழில் பிரச்சினை – நான் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதாது – வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் முன்னெடுக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, December 12th, 2023

எல்லைதாண்டும் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் நான் மட்டும் பேசிக்  கொண்டிருந்தால் மட்டும் போதாது. வடக்கிலே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பில் இங்கள்ள இந்தியத் தூதரகம் அறியாததல்ல – இதையும் கடந்து, வடக்கின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக தமிழகம் சென்று, தமிழக முதல்வர், எதிர்க்கட்சித தலைவர் அடங்கலாக ஏனைய அரசியல் தரப்பினர், ஊடகங்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியு்ளளார்.

கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான சபை வாத – விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.-

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இந்திய இழுவை மடி வலைப் படகுகள் மூலமான எமது கடல் வளங்களின் அழிவுகள்,  கடற்றொழிலார்களின் வாழ்வாதாரங்கள் உட்பட அவர்களது கடற்றொழில் உபகரணங்களுக்கான பாதிப்புகள் தொடர்பில் நான் பலமுறை இந்த சபையிலும், சபைக்கு வெளியிலும் கூறியிருக்கின்றேன்.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பிரகாரம் இழுவை மடி வலைப் படகுகள் கைது செய்யப்படுகின்ற நிலையில் அவற்றின் தொழிலார்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையில் விடுவிக்கப்படுகின்றனர். பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி, இலங்கை கடற் பரப்பிற்குள் அந்த இழுவை மடி வலைப் படகுகள் வந்தமை தங்களுக்குத் தெரியாதெனக் கூறி, அவற்றை விடுவித்துக்கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

இத்தகைய நிலையில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்ற இழுவை மடி வலைப் படகுகளின் உரிமையளார்களுக்கும் குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்கின்ற வகையில் சட்ட மூலமொன்று அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேற்படி அத்துமீறி, எல்லைத் தாண்டி, இலங்கைக் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டு தொடர்ந்து கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகள் தொடர்பில் பல தடவைகள் இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன. சுட்டரீதியான கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், அவை எவையும் சரிவர கைகூடவில்லை.

இந்திய இழுவை மடி வலை கடற்றொழிலாளர்கள் பாரம்பரிய முறையில் அவர்களது கடற்பரப்பிலேயே கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும், இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் வந்து அவர்களைக் கைது செய்வதுமாகவே தமிழகத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும், கடற்றொழில் அமைச்சர் என்ற வகையிலும் இந்திய மற்றும் தமிழக மக்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் ஊடகங்கள் வாயிலாகவும், கடிதங்கள் மூலமும், நேரிடையேயும் உண்மை நிலைமையினை தெளிவுபடுத்தியுள்ளேன்.

அதாவது, இது இந்திய கடற்றொழிலாளர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான பிரச்சினை அல்ல, இது இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாட்டாளர்கள் காரணமாக இலங்கையின் கடற்றொழிலாளர்களின் குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் தமிழ் கடற்றொழிலார்களின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களது கடற்றொழில் உபகரணங்களுக்கம், இலங்கையின் கடல் வளத்திற்கும் பாதிப்புகளை, அழிவுகளை ஏற்படுத்துகின்ற பிரச்சினை என்பதையே நான் தெளிவுபடுத்தி வருகின்றேன்.

இந்த செயற்பாட்டினை நான் மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. வடக்கிலே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என நான் பகிரங்கமாகவே பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

இந்த விடயம் தொடர்பில் இங்குள்ள இந்தியத் தூதுவருடன் கதைப்பதாக சில தமிழ் அரசியல்வாதிகள் கூறியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இந்தியத் தூதரகம் அறியாமல் அல்ல. எனவே, இதையும் கடந்து, வடக்கின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக தமிழகம் சென்று, தமிழக முதல்வர், எதிர்க்கட்சித ;தலைவர் அடங்கலாக ஏனைய அரசியல் தரப்பினர், ஊடகங்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவுபடுத்த வேண்டும். 

000

Related posts: