வடக்கிற்கான போக்குவரத்தில் போதிய பஸ் வண்டிகள் இணைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, February 8th, 2019

இலங்கைப் போக்குவரத்து சபை பற்றி குறிப்பிடுகின்றபோது, சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மிகையாக இருப்பதாகவும், சில சாலைகளில் பற்றாக்குறை நிலவுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்வரையில் பற்றாக்குறைகள் காணப்படுகின்ற அதே வேளை வடக்கு மாகாணத்தில் பொது மக்களது போக்குவரத்துத் தேவைகளை போதியளவு பூர்த்தி செய்வதற்கேற்ப பஸ் வண்டிகள் போதாக்குறையும் நிலவுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தோடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை போக்குவரத்து சபைக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவதில் வடக்கு மாகாணம் முன்னிற்பதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் எனது கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இந்தச் சபையிலே கூறியிருந்தார். அத்தகைய வருமானத்தை ஈட்டித் தருகின்ற வடக்கு மாகாணத்தில் போதிய பஸ் வண்டிகள் இல்லாமல் எமது மக்கள் நடந்து செல்கின்ற நிலை இன்றும் பல பகுதிகளில் காணப்படுகின்றன.

எனவே, புதிய பஸ் வண்டிகளை கொள்வனவு செய்கின்றபோது, பொது மக்களின் தேவை அடிப்படையில் மாவட்ட ரீதியில் அவை பகிரப்பட வேண்டும் என்பதையும், பழுதடைந்துள்ள பஸ் வண்டிகளை உடனுக்குடன் திருத்தி பாவனைக்கு விடுவதற்கான விரைவு பொறிமுறையொன்று வகுக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே நேரம் வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை யாழ்ப்பாண சாலையின் பிராந்திய முகாமையாளர், தனது பதவியை பாதுகாத்துக் கொள்வதில் மாத்திரம் அவதானத்தைச் செலுத்திக் கொண்டிராமல், அனைத்து பணியாளர்களையும் அரவணைத்து, அவர்களை ஊக்குவிக்கின்ற வகையிலான வழிமுறையில் செல்கின்ற ஒரு போக்கினை கொண்டவராக இருப்பின் அந்தச் சாலையை மேலும் வெற்றிகரமாக முன்னேற்ற முடியும் என நினைக்கின்றேன்.

Related posts:


35 அடிக்கு மேற்பட்ட நீளமான மீன்பிடி படகுகளுக்கு அரச மானியம் வழங்க நடவடிக்கை - டக்ளஸ் தேவானந்தா ஏற்பா...
தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள் துண்டு போடுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் வருமானம் மூன்று இலட்சம...