தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் இந்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றதா?  – டக்ளஸ் எம்.பி !

Friday, March 9th, 2018

நாட்டின் வரலாற்றை தமிழ் மொழி மூலமாக, தற்போதுள்ள பாடசாலை வரலாற்று பாட நூல்களிலுள்ள பாடங்களின் மூலமமாக கற்கின்ற மாணாவர்களுக்கு தாங்கள் இந்த நாட்டுக்கு வந்தேறு குடிகளா? என்ற கேள்வியே எழுமே அன்றி, தாங்களும் இலங்கையர்கள் என்ற எண்ணம் எழுமா? என்பதை தெளிவுபடுத்துமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழான கட்டளைகள், தேசிய கல்வி ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில் –

தேசிய கல்வி ஆணைக்குழுவின் நோக்கம் என்ன என்று பார்க்கின்றபோது, ‘இலங்கையன் என்ற அடையாளத்தைப் பேணுதல், சகல பிரச்சினைகளுக்கும் முகங் கொடுத்தல், சமச்சீரான ஒரு சமூகத்தை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுக்காக யாவருக்கும் கருத்துள்ள கல்வியை வழங்குதல்’ எனவும், அதன் பணி என்ன எனப் பார்க்கின்றபோது, ‘சமூகத்தில் மாறிவரும் தேவைகளைக் கருத்தில் கொண்ட முறையிலான கல்வி முறையை உருவாக்குவதற்கு ஏற்ற தேசிய கல்விக் கொள்கையை விருத்தி செய்து வளமான இலங்கையை பரிணமிக்கச் செய்தல்’ எனவும் கல்வி ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி நோக்கமும், பணியும் சிறப்பானதுதான். என்றாலும், இது, இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு இந்த நாட்டின் அரச கல்வித்துறை செயற்பாடுகளில் நடைமுறையில் இருக்கின்றனவா? என்பது கேள்விக்குறியே என்பதுதான் உண்மை.

ஏனெனில், இந்த நாட்டின் தமிழ் மொழி மூலமான பாடசாலைக் கல்வி முறையை எடுத்துக் கொண்டால்,  ‘இலங்கையன்’ என்ற அடையாளத்தைப் பேணும் வகையிலானதோ, சமச்சீரான ஒரு சமூகத்தை உருவாக்கும் வகையிலானதோ ஏறபாடுகள் எதுவுமே இருப்பதாகத் தெரிய வரவில்லை.  அதேநேரம், சமூகத்தில் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இந்த நாட்டின் ஒட்டுமொத்தமான அரசக் கல்விக் கொள்கை இல்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது.

தமிழ் மொழி மூலமான பாடசாலை வரலாற்றுப் பாடநூல்களை எடுத்துக் கொண்டால், இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களது வரலாறுகள் மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் இருப்பதை நான் பல தடவைகள் எடுத்துக் கூறியும், அது தொடர்பில் கல்வி அமைச்சில், கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் அவர்களது தலைமையில் கலந்துரையாடல்களை நடத்தியும், அது ஏற்றுக் கொள்ளப்பட்டும், இவ் விடயம் தொடர்பில் இன்னும் ஆரோக்கியமான நடவடிக்கைகள் எதுவுமே முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவரவில்லை.

தமிழ் மொழி மூலமாக இந்த நாட்டின் வரலாற்றை தற்போதுள்ள பாடசாலை வரலாற்று பாட நூல்களிலுள்ள பாடங்களின் மூலமமாக கற்கின்ற மாணாக்கருக்கு. அங்கே இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களது வரலாறுகள் இல்லாத நிலையில், தமிழ் மன்னர்கள் பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில், தமிழ் இராசதாணிகள் குறித்த விபரங்கள் இல்லாத நிலையில், சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில், அந்நியருக்கு எதிராக போராட்டம் நடத்தியதில் பங்கு கொண்டிருந்த தமிழ், முஸ்லிம் தலைவர்களது பங்களிப்புகள் குறித்த தகவல்கள் இல்லாத நிலையில் அந்த மாணாக்கருக்குள் தாங்கள் இந்த நாட்டுக்கு வந்தேறு குடிகளா? என்ற கேள்வியே எழுமே அன்றி, தாங்களும் இலங்கையர்கள் என்ற எண்ணம் எழுமா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

Related posts:

முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் தடுப்பு ஏற்பாடுகள் அவசியம் - டக்ளஸ் தேவானந்தா சுகா...
அரசு “பிள்ளையார் பிடித்தாலும் விளைவு குரங்காகத்தான் இருக்கின்றது” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இம்மாதம் தீர்மானமிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தை – அமை...