தேசியப் பிரச்சினை தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, September 21st, 2018

அமரர் மங்கல முனசிங்க அவர்களது பரிந்துரைகளிலிருந்து இந்த நாடு தேசியப் பிரச்சினை தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலளார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ உபதிஸ்ஸ சில்வா, கௌரவ திலகரட்ன, கௌரவ மங்கல முனசிங்க ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணைல் கலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாடாளுமன்ற உறுப்பினராக, இலங்கைக்கான இந்தியா மற்றும் லண்டன் நாடுகளுக்கான தூதுவராக செயற்பட்டிருந்த சட்டத்தரணி, அமரர் மங்கலநாத் முனசிங்க அவர்கள், லங்கா சம சமாஜ கட்சியின் மூலமாக 1965ஆம் ஆண்டு நாடாளுமன்ற பிரவேசம் கண்டவர்.
இந்த நாட்டு அரசியலில் கௌரவமான ஒரு பாத்திரத்தை வகித்துள்ள அன்னார், தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் தொடர்பான விடயத்தில் மிகவும் அக்கறை கொண்டு நேர்மையாக உழைத்தவர்களில் ஒருவர்.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களது காலத்தில் அமரர் மங்கல முனசிங்க அவர்களது தலைமையில் அமைக்கப்பட்ட தெரிவுக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் இன்று வரையிலும் பேசப்படுவதற்கு, அன்னாரது பக்கசார்பற்ற உழைப்பு ஓர் எடுத்துக் காட்டாகும் என்றே கூற வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது முதல் நாம் எதைக் கூறி வருகின்றோமோ அதையே அவரும் மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தி வந்துள்ளார். இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது எமது மக்களுக்கான அரசியல் தீர்விற்கு ஓர் ஆரம்ப கட்டமாக அதனை முழுமையாக செயற்படுத்துவதன் மூலம் ஆரம்பிப்பதிலிருந்து மேலதிக அதிகாரங்களை நோக்கி முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

இதனையே நாம், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என ஆரம்பந்தொட்டு வலியுறுத்தி வருகின்றோம்.எமது இந்தக் கொள்கை பற்றி அன்று புரிந்து கொள்ள மறுத்தோர் கூட, இன்று எமது அதே வழிமுறைக்கு வந்தும் அதனை பகிரங்கமாகச் சொல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். ‘சமஸ்ரி’ வேண்டும் ஆனால், ‘சமஸ்ரி’ என்ற பெயர் தேவையில்லை என்கின்றனர்.

இந்த ‘சமஸ்ரி’ என்ற பெயரை உருட்டி எமது மக்கள்மீது, எமது மக்களது வாக்குகளைப் பறிப்பதற்காகத் திணித்துள்ளவர்கள் இவர்கள். இதனால், இவர்களுக்குள்ளேயே இன்று குழப்பங்கள் நிலவுகின்றன. இதே சுயலாப அரசியல்வாதிகளில் ஒரு தரப்பினர் ‘இல்லை, சமஸ்ரிதான் வேண்டும்’ என்கின்றனர். சிலர், ‘சமஸ்ரி’தான். ஆனால், அந்தப் பெயரில் அல்ல” என்கின்றனர்.
அந்தவகையில், இத்தகைய வேடிக்கைகள் காட்டப்பட்டுக் கொண்டு இவர்களது சுயலாப அரசியல் இன்று சாவுமணி அடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மங்கல முனசிங்க அவர்களது அறிக்கையின் பரிந்துரைகள் அன்றைய காலகட்டங்களில் செயற்படுத்தப்பட்டிருந்தால், எமது மக்களின் ஓரளவு பிரச்சினைகளைத் தீர்த்திருக்க முடியும். அது கைகூடவில்லை என்பதற்காக அந்த அறிக்கை செல்லுபடியற்றதான ஒன்றல்ல.
அதற்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க அவர்களால் – இதுவரையில் இந்த நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள அற்புதமானதொரு தீர்வுப் பொதி கொண்டுவரப்பட்டது.

அதனை அன்றைய எதிர்க்கட்சி எதிர்த்திருந்தாலும், அந்த எதிர்ப்பிற்கு பின்னணி பலம் கொடுத்தவர்களாக இதே தமிழ் சுயலாப அரசியல்வாதிகளே இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இத்தகைய நிலைமைகளைத்தான் பின்னர், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கும்போது, அமரர் மங்கல முனசிங்க அவர்கள், ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையொன்றுக்கு ஆளுங்கட்சி தீர்வொன்றைக் காண முற்பட்டால், அதனை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்ற அரசியல் போக்கின் காரணமாகவே நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில் அமரர் கௌரவ மங்கல முனசிங்க அவர்களது பரிந்துரைகளிலிருந்து இந்த நாடு தேசியப் பிரச்சினை தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு என்பதில் சந்தேகமில்லை.
இன்று அன்னார் உட்பட கௌரவ உபதிஸ்ஸ சில்வா மற்றும் கௌரவ எம். திலகரட்ன ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அவர்களது பிரிவுத்துயரங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் அனைவருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமும் அந்தத் துயரங்களில் எப்போதும் பங்கெடுத்தவர்களாக இருப்போம் என்பதை நினைவுறுத்தி விடைபெறுகின்றேன்.

Related posts: