தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவே அமைச்சரவையில் இணைந்துள்ளேன் – தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 8th, 2020

தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவும் நல்லிணக்க அடையாளமாகவும் இந்த அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரத்தில் பங்கெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், தேசிய நல்லிணக்க உறவால் கிடைத்த அமைச்சு அதிகாரத்தை சிறந்த முறையில் செயற்படுத்தி காட்டுவேன் எனவும் காணாமல் போனவர்களின் உறவுகளின் கண்ணீருக்கு பரிகாரம் தேட அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றது போல், முடிந்தளவு மக்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சரவையின் அங்கீகாரத்ததினை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று(08.01.2020) நடைபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அக்கிராசன உரை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு குறிப்பிடத்தக்களவு வாக்குகளை வழங்காத போதிலும், ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய பதவியேற்வு நிகழ்வில் தெரிவித்ததைப் போன்று தமிழ் மக்கள் உட்பட நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதி என்ற வகையில் தமிழ் மக்களுக்கு வழங்கியிருக்கும் அங்கீகாரமாகவே தன்னுடைய அமைச்சுப் பதவி பலராலும் கருதப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேர்தல் முடிவுகள் வெளியான மறுகணத்தில் இருந்தே தமிழ் மக்கள் தாம் விட்ட தவறுகளை எண்ணி எம்முடன் மனம் விட்டுப் பேசி வருந்தத் தொடங்கி விட்டார்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள், மக்களின் இத்தகைய மனமாற்றங்கள் கடந்த காலங்களை போலன்றி நிரந்தரமானதாக நீடிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இனிவரும் காலங்களில் மக்கள் தமது ஆதரவை யானைக்கு வழங்காமல் தான் கேட்கும் ஆணைக்கு வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் அதுவரை காத்திருக்காது கிடைத்திருக்கும் அதிகாரத்தினை பயன்படுத்தி தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் பிரச்சினைகளையும் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழ் மக்களின் அவலங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற தமிழ் கட்சிகள், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமுமின்றி கடந்த ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்து இருந்துவிட்டு, சாத்தான்கள் வேதம் ஓதுவது போன்று ஏதோ பிதற்றிக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, எதிர்காலத்தில் தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என்பது தொடரபாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஒரு சிலரினால் வெளியிடப்பட்ட கருத்துக்களாக அவை இருக்கலாமே தவிர, அரசாங்கத்தினால் அவ்வாறான தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளபடவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.

அத்துடன், சுயலாப தமிழ் கட்சிகளின் தவறான வழி நடத்தலை எண்ணி தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் வஞ்சித்து விடாது என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Related posts:

இரணைமடுக் குளத்தினை மேலும் விஸ்தரிப்பதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி - கிளிநொச்சியில் அம...
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் - பொலிஸ் மா அதிபருக்கு அமை...
இளம் சமூகத்தினரை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்க உறுதியோடு உழைத்தவர் அமரர் சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மா - அ...