தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டை மட்டுமல்ல தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்துவிட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, March 26th, 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த நாட்டை சர்வதேசத்திற்குக் காட்டிக் கொடுத்துவிட்டதாக தென் பகுதியில் சிலர் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல உண்மை. தமிழ் மக்களையும் சர்வதேசத்திற்குக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள் என்பதே உண்மையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இறுதியில் இரண்டு வருட கால அவகாசம் வழங்கிவிட்டு, கண்காணிக்கின்றோம் என சர்வதேசம் ஒதுங்கி நின்றாலும், இனி அடுத்த இரண்டு வருடங்கள் வரையில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என இந்த அரசும் ஒதுங்கிவிடாமல், எமது மக்களுக்கு நியாயப்பூர்வமான வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். குறுகிய இனவாத சக்திகளுக்கு அஞ்சி, இந்த நாட்டு மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்களது உணர்வுகளை ஒடுக்கிவிடக்கூடாது.

அந்த வகையில் யுத்தத்திற்குப் பின்னரான இந்த நாட்டு அரசின் கடப்பாடுகளை நேர்மையுடன் முன்னெடுப்பதற்கு இந்த அரசாங்கம் இனியாவது முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். சர்வதேச அழுத்தங்களை எதிர்க் கொள்வதைத் தவிர்த்து, அதை உங்களால் செய்ய முடியும். மனமிருந்தால், எதுவும் முடியும். அரசாங்கம் அப்படி எதையாவது தமிழ் பேசும் மக்கள் நலன் சார்ந்ததாக முன்னெடுக்கின்ற வேளையில், அதை இனவாத குறுகிய கண்ணோட்டத்துடன் தெற்கில் பார்க்கக் கூடாது என்ற கோரிக்கையினையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் உணர்வுப்பூர்வமாகக் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால், நிச்சயமாக பொறுப்புக் கூறல் என்பதை ஒரு வெறுப்பான விடயமாகப் பார்க்கக் கூடாது என்றே கூறிவைக்க விரும்புகின்றேன்.

Related posts:


யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு வேண்டும் - நாடாளுமன்றில் ட...
தேசிய உற்பத்தியுடன் கூடிய சுய பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்று தேசிய நல்லிணக...
தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள் உருவாக வேண்டும் – அதையே தான் விரும்புவதாக அ...