கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி பலமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவதே எதிர்பார்ப்பு – முகமாலையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

Wednesday, November 3rd, 2021

கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி  சாத்தியமான வழிகளின் ஊடாக பலமான பொருளாதார கட்டமைப்புக்களை எமது மக்களுக்கு உருவாக்கி கொடுக்க  வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலத் தவறான தீர்மானங்களினாலேயே மக்கள் இவ்வாறான சூழலை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார் .

முகமாலையில் சுமார் 316 ஏக்கர் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“1987ம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்படிக்கை மூலம் கிடைத்த வாய்ப்பை, சரியாகப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை முறையை முழுமையாக அமுல்ப்படுத்துவதன் மூலம்   தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை அன்று எனக்கிருந்தது.

இதே கொள்கையையே நான் இன்றும் கொண்டுள்ளேன். அப்போது இதை எதிர்த்தவர்களும் பின்னர் மாகாணசபை முறையை ஏற்றுக்கொண்டு தேர்தல்களின் போட்டியிட்டு பதவிகளையும் பெற்றுக்கொண்டனர்.

அப்போதே இதை ஏற்றுக்கொண்டு அமைதிவழியில் நல்லிணக்க வழிமுறையில் தமிழ் மக்களுக்குத் தீர்வுகாண முனைந்திருந்தால் அதன் பின்னர் ஏற்பட்ட யுத்த அழிவுகளிலிருந்து மக்களைப் பாதுகாத்திருக்க முடியும். அவ்வாறில்லாமல், அழிவு யுத்தத்ததைத் தொடர்ந்ததன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் பேரழிவுகளைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால்தான் சொல்கிறேன், இந்த அழிவுகள் ஏற்பட்டிருக்கக்கூடாது என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது.

எனவே,  தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தினை வளர்ப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதே இலக்காக இருக்கின்றது” எனவும் தெரிவித்த அவர் .

மேலும், தனக்கு கிடைத்திருக்கின்ற அமைச்சு அதிகாரத்தின் ஊடாக  பலமான பொருளாதார கட்டமைப்புக்களை எமது மக்களுக்கு உருவாக்கி கொடுக்க  வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்த அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, இச்சந்தர்ப்பத்தினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேணடும் எனவும் கேட்டுக்கொண்டார்.

000

Related posts: