தடம் மாறிச் செல்லும் இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

தடம் மாறிச் செல்லும் எமது இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்கின்றோம். அதற்கான சரியான வழியைக் காட்ட இளைஞர் அமைப்புகள் முன்வரவேண்டும். அவ்வாறான சரியான பங்களிப்பு எமக்கு கிடைக்குமானால் நிச்சயமாக எமது இனத்தை அவலங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் வருடாந்த விளையாட்டு விழா நாரந்தனை விளையாட்டு கழக மைதானத்தில் இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் கோகுலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எமது இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் போர்வையில் உணர்ச்சியுட்டி சுயலாபங்களுக்காக தவறாக வழிநடத்துவதாலுமே எமது சமூகம் இன்றும் சீரழிந்துகொண்டிருக்கின்றது. இது நிச்சயம் எமது இனத்தை மற்றுமொரு அழிவுக்கே இட்டுச் செல்லும்.
அத்தகைய தவறான போக்கில் எமது இளைஞர்களை செல்லவிடாது சரியான வழிநோக்கி வழிநடத்திச் செல்ல இத்தகைய கழகங்கள் முன்னின்று உழைக்கவேண்டும்.
கடந்த காலங்களிலும் சரி இன்றும் சரி நாம் எமது இனத்தின் பண்பாடுகளையும் பாரம்பரியங்களையும் சிதைவடைந்துவிடாது பாதுகாப்பதிலும் எமது இளம் சமூகத்தினரது ஆற்றல்களை ஊக்குவித்து அவர்களை ஒளிமயமான ஒரு நிலைக்கு கொண்டு செல்வதற்காகவும் நாம் அயராது உழைத்து வந்திருக்கின்றோம்.
அந்தவகையில் எமது இளைஞர்களுக்கு சமூக ரீதியாகவே அன்றி அரசியல் ரீதியாகவோ சரியான வழியைக் காட்ட இவ்வாறான இளைஞர் அமைப்புகள் எம்முடன் இணைந்து சரியான பங்களிப்பை தருவார்களாக இருந்தால் நிச்சயமாக எமது இளைஞர் சமூகத்திற்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது. என்பதுடன் இதை செய்து காட்டும் ஆற்றலும் அக்கறையும் தற்துணிவும் எம்மிடம் உள்ளது என்றும் மேலும் தெரிவித்த செயலாளர் நாயகம்நாரந்தனை மக்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் உள்ள உறவு என்பது நகமும் சதையும் பொன்றது. அந்தவகையில் இப்பிரதேசத்தின் வளர்ச்சிக்காக நாம் நிச்சயம் உழைக்கத் தயாராக இருக்கின்றோம். அதற்காக உங்களது பங்களிப்பும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
நிறைவில் போட்டியில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளிற்கு பரிசில்களை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்து கௌரவித்தார்.
இதில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளரும் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான ஜெயகாந்தன் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரி அலன்ரின் (உதயன்) ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி. மஞ்சுளாதேவி சதீஸன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|