தங்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் குறித்து எமது மக்களிடையே தெளிவு ஏற்பட்டுள்ளது –  டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 28th, 2017

எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் பிரதிநிதிகள் எமது மக்களது பிரச்சினைகளை இதுவரை காலமும் தீர்க்க முன்வராத நிலையில், தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எமது மக்களே இன்று வீதிக்கு இறங்கிப் போராட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 22ம் திகதி தங்களது குடியிருப்பினை உறுதி செய்து தருமாறு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வவுனியா, விக்ஸ் காட்டுப் பகுதி வாழ் மக்களது போராட்டம் வெற்றியை நோக்கிய நிலையில் செல்வது அம் மக்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், மேற்படி காட்டுப் பகுதியில் கடந்த 9 வருடங்களாக 47 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இவர்களது குடியிருப்புப் பகுதியானது வன இலாக்காவிற்கு உட்பட்ட பகுதி என்பதால், வன இலாக்காவினர் இம் மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளனர் என இம் மக்கள் தெரிவித்து, தங்களது குடியிருப்பினை மேற்படி தொல்லைகளிலிருந்து விடுவித்து, அதனை உறுதி செய்து தருமாறு கோரி மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இம் மக்களது போராட்டத்தின் பயனாக உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள வவுனியா அரச அதிபர் திரு. ரோஹன புஷ்பகுமார, மேற்படி காணிகளை அம் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன இலாக்காவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் பிரகாரம் இக் காணிகள் அம் மக்களுக்கு விரைவில் விடுவிக்கப்படுமென்றும், மேற்படி 47 குடும்பங்களுக்குமான வீட்டுத் திட்டம் உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது. அந்தவகையில், எமது மக்களின் நலன் கருதி மேற்படி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள வவுனியா அரச அதிபருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் அவர் மேற்படி நடவடிக்கைகளை விரைந்து செயற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது மக்களின் தேவைகளை, பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவே எமது மக்கள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றனர். எனினும், அந்தப் பிரதிநிதிகளால் எமது மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றால், ஏன் இவ்வாறானவர்களை தங்களது அரசியல் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும் என்பது குறித்து எமது மக்கள் மத்தியில் தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளதையே இவ்வாறான மக்கள் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன எனவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_0608

Related posts:

வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு நாடாளுமன்றத்தில் ட...
தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கும்,பொருளாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு வேண்டும் - செயலாளர் நாய...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவேன் - கடற்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் அம...