இந்திய மீனவர்களின் அத்துமீறல் பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவேன் – கடற்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, July 19th, 2023


~~~~

ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் அவர்களின் இழுவை மடித்தொழில் முறை பற்றி இந்திய பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரஸ்தாபித்து உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளளார்.

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இன்று (19.07.2023) அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சரிடம், இந்திய இழுவைப் படகுகளால் தமது கடல் வளம், மீன் பிடி உபகரணங்கள் என்பன அழிக்கப்படுவதாகவும் அதனால் தங்களது வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் அமைச்சர் ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது இந்தியப் பிரதமர் மற்றும் உயர்மட்ட அதிகாரிளிடம் இப் பிரச்சினை தொடர்பாக பேசி இந்திய இழுவைப் படகுகளின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

அத்துடன் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்ததுடன் அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், அவைதொடர்பான கோரிக்கை கடிதங்களையும் அமைச்சரிடம் ஒப்படைத்தளனர்.

வட பகுதி கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை மிகவும் ஆர்வத்துடன் செவிடுமத்த அமைச்சர்,
வட பகுதி மீனவர்களுக்காக தான் கடற்றொழில் அமைச்சராக இருக்கும் காலத்தில் மட்டுமல்லாமல், கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக அவர்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் அவர்களுக்காக குரல் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்ததுடன், சக தமிழ் தரப்புக்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசி வருவதாகவும் ஆனால் வட பகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அவர்கள் ஒருபோதும் பேசுவவதில்லையெனவும் தெரிவித்தார்.

மேலும், இந்திய கடற்றொழிலார்களின் அத்துமீறல்கள் தொடர்பாக அவர்கள் இந்திய தூதரகத்துடன் பேசலாம் அல்லவா? எனவும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இம்முறை இந்திய விஜயத்தின் போது கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிர்ந்தர தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற தலைவரும் சிறந்த ராஜதந்திரியுமான எமது ஜனதிபதியின் பங்களிப்பும் இவ் விடயத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்குமெனவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts:


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு: ஈ.பி.டி.பியின் வழிமுறை நோக்கி வட்டுக்கோட்டையில் அண...
மீன் வள ஆய்வுகளை மேற்கொள்ள கடற்றொழில் அமைச்சு - இலங்கைக்கான நோர்வே தூதரகம் இணைந்து நடவடிக்கை!
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் - எமது மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்காக ஜனாதிபதிக்கு தேவையான ஒத்...