வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 20th, 2018

வறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செப்ரெம்பர் மாத இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகியிருப்பதானது அதிர்ச்சியளிக்கின்றது.

குறிப்பாக வன்னியில் வாழும் கணவனை இழந்த குடும்பத் தலைவிகளும், அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மோசடியாளர்களிடம் சிக்கி வறுமை காரணமாகவும், நுண்கடன் தொல்லைகள் காரணமாகவும் கிட்னியை விற்று வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவலத்தை தடுத்து நிறுத்தி எமது மக்களை காப்பாற்ற வேண்டும் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (20.11.2018) விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கிட்னியை விற்கும் நிலையை உடனடியாகநிறுத்த வேண்டும். குடும்பத் தலைவிகள் அத்தகைய மோசடிக்கு இடமளிக்க வேண்டாம். ஊடனடியாக கிட்னியை விற்கும் முடிவை கைவிட்டு, வாழ்வாதாரத் திட்டங்களைப் பெற்றுக்கொள்ள உங்கள் கோரிக்கையை விரைவாக எனக்கு கிடைக்கச் செய்யுங்கள்.

நுண்கடன் தொல்லையில் இருந்து உங்களை மீட்கவும், நீங்களே உழைத்து வாழ்வதற்குமான விரைவான நடவடிக்கையை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமும் கலந்துரையாடி விஷேட அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து உரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளேன்.

எனவே கிட்னியை விற்பதையோ, வேறு சமூகவிரோத தூண்டல்களில் அகப்பட்டுக் கொள்வதையோ தொடர அனுமதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

மக்களுக்கு சேவை செய்வதற்கான விருப்பத்துடன் இருப்பவர்களை தடுத்து தமது சுயலாபங்களை நிறைவேற்றிக் கொண்டவர்களால், எமது மக்கள் இன்று இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளீர்கள்.

இப்போது மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதற்கு மீண்டுமொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எமது மக்களின் அவலத்தையும், வறுமையையும் இல்லாதொழிப்பதற்கு இயலுமான முயற்சியை மேற்கொள்வேன்.

எனவே எமது மக்கள் நம்பிக்கையோடு உங்கள் கோரிக்கையை விரைவாக எனக்குக் கிடைக்கச் செய்யுங்கள். ஊடனடியாக செய்யக் கூடியதை உடனடியாக செய்யும் அதேவேளை நிலையான திட்டங்களை வேறாகவும் நடைமுறைப்படுத்தி எமது மக்களை தற்போதைய சூழலிலிருந்து மீட்டெக்க தேவையான அனைத்துக் காரியங்களையும் முன்னெடுப்பேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts:

வடக்கில் தபால்துறை சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்ட வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பில் அமைச்சர் டக...
புலிபாய்ந்த கல் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எந்தவித சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்க கூ...