ஜனநாயக வழிமுறையின் ஊடாகவே நிரந்தர தீர்வை பெறமுடியும் என்று கூறியவர்கள் நாங்கள் – பூநகரியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 15th, 2019

வன்முறைகளூடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை வெளிப்படையாகக் கூறியவர்கள் நாங்கள். அதை இதர தரப்பினரும் ஏற்றுக் கொண்டிருந்தால் எமது மக்கள் இத்தகைய அவலங்களைக் சந்தித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூநகரி, குமுழமுனை, நாகபடுவான் வட்டார உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாம் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து நாடாளுமன்ற ஜனநாயக அரசியலினூடாகவே எமக்கான தீர்வைக் காணமுடியும் என்ற முடிவிற்கு வந்து அதனடிப்படையிலேயே இன்றுவரை எமது மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளை நாடாளுமன்ற ஜனநாயகவழியூடாக முன்னெடுத்துவருகின்றோம்.

கடந்த காலங்களில் பல்வேறுபட்ட தீர்வுகள் எமக்கு கிடைக்கவிருந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நிராகரித்தவர்கள் இன்று புதியதொரு அரசியல் சீரமைப்பு தொடர்பில் மக்களிடம் பலவாறு எடுத்துக்கூறிவருகின்றனர். ஆனால் இந்தப் புதிய அரசியல் சீர்திருத்தம் ஒருபோதும் நடைமுறைக்குவராதென்றே நான் கருதுகின்றேன்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கூறிவந்த ஜதார்த்தவழிமுறைகளே இன்று நியமானது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

அந்தவகையில் இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதே எமது மக்களின் நலன்களிற்கு நன்மை பயக்கும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரையில் வன்முறையூடாக தீர்வைக்காணமுடியாது என்பதை நீண்டகாலமாக எடுத்துக்கூறிவருகின்றது.

வடக்கு மாகாணசபையை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாங்கள் முன்னெடுத்துவந்த அபிவிருத்திகளைக் கூட தடுத்து வந்தனரே தவிர மாகாணசபையின் அதிகாரங்களைக் கொண்டு எந்தவொரு மக்கள் நலன்சார் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. இதுவும் எமது மக்களின் அவலநிலைக்கு காரணமாக அமைகிறது.

கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த குறைந்த பட்ச அரசியல் அதிகாரங்களைக் கொண்டே நாம் எமது மக்களின் பல்வேறுபட்ட உரிமை மற்றும் அபிவிருத்திசார் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.

ஆனால் தமிழ் மக்களின் அரசியல்பலத்தை போலித் தேசியம் பேசிப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது நலன்களை நிறைவு செய்து கொண்டார்களே தவிர மக்களுக்கு சிறியளவிலான உதவிகளைக் கூட செய்துகொடுக்கமுடியாது இருந்துள்ளனர்.

அந்தவகையில் போதிய அரசியல் பலத்தை மக்கள் நம்பிக்கையுடன் எமக்குத் தந்தால் எமது மக்கள் படும் துன்பதுயரங்களுக்கு மிகவிரைவில் தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அதை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.

Related posts: