சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும். ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் டக்ளஸ் தேவானந்தா  சுட்டிக்காட்டினார்.

Sunday, July 23rd, 2017
அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் தீர்வானது தமிழ்மக்களுக்கு நியாயமானதாகவும், பெரும்பான்மை சிங்கள மக்கள் உட்பட சகோதர முஸ்லிம்களுக்கும் ஏற்புடையதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் அவர்களிடம் கூறினார்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று(20.07.2017) செயலாளர் நாயகத்திற்கும், ஐ.நாவின் உதவிச் செயலாளர் நாயகத்திற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ்மக்களின் நிலைப்பாடு தொடர்பான தெளிவுபடுத்தும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தனது உரையில்,
அழிவு யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் தம்மைக் காப்பாற்ற சர்வதேச சமூகம் முன்வரும் என்ற எதிர்பார்ப்புடன் அவலக்குரல் எழுப்பியபோது சர்வதேச சமூகம் ஆபத்தில் உதவ முன்வரவில்லை. மரணத்தருவாயில் இருந்து கொண்டு தமிழ்மக்கள் முன்வைத்த அந்த கோரிக்கை சர்வதேச சமூகத்திடம் எடுபடவில்லை. எனவே எமது பிரச்சினைக்கு நாமே தீர்வுகளைக்கான வேண்டும் என்ற பாடத்தை தமிழ்மக்கள் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
சர்வதேச சமூகத்தின் அக்கறைகள் தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு வேறுபட்டதாக இருக்கின்றபோதும், தேர்தல்களின்போது வாக்குகளை அபகரிப்பதற்காக சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுத்து அரசியல் தீர்வையும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் என்பவற்றில் தமிழ்மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியையும், பரிகாரத்தையும் பெற்றுத் தருவோம் என்று பொய் வாக்குறுதி வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளின் கபடத்தனத்தால், சர்வதேச சமூகம் மீது தமிழ்மக்களிடம் எஞ்சியிருந்த நம்பிக்கைகளும் கூட்டமைப்பால் தகர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசியல் தீர்வைப் பெறும் முயற்சியில் சர்வதேச சமூகம் குழந்தை பெறவிருக்கும் தாய்க்கு உதவும் மருத்துவிச்சியைப் போன்ற உதவியை வழங்க வேண்டும்.
புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது கடுமையான சோதனைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். எம்மைப் பொறுத்தவரை 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பிப்பதே தீர்வொன்றுக்கான சிறந்த வழிமுறையாக இருக்கும். இதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெறத் தேவை இல்லை. சர்வஜன வாக்கெடுப்புக்கும் போகத் தேவை இல்லை. தவிரவும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டு அதை அனுபவிக்கவும் செய்கின்றார்கள் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு பலப்படுகின்றபோது, தேவைக்க ஏற்ப செழுமைப்படுத்திக்கொள்ளலாம் என்பதே எமது நிலைப்பாடாகும். புதிய அரசியலமைப்பு இதைவிடவும் மேம்பட்டதாக அமைந்தால் அதை நாம் வரவேற்போம்.
இதேவேளை, யுத்தத்தில் அங்கங்களை இழந்தும், குடும்பத் தலைவர்களை இழந்தும் அவலப்படும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெருமளவில் வழங்கி அவர்களிடையே வாழ்க்கை மீதான நம்பிக்கையை சர்வதேச சமூகம் ஏற்படுத்த வேண்டும்.
அதேநேரம் கடும் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகி குடி தண்ணீருக்கும், விவசாயப் பாதிப்புக்கும், இலக்காகி பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு சர்வதேச சமூகம் மனிதாபிமான ரீதியில் உதவ வேண்டும் என்றும் கூறினார்.

Related posts:

ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்த...
தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்!
சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அம...