கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, June 6th, 2019

மதிப்பீடுகள் தொடர்பிலான விவாதத்தில் நாங்கள் கலந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும் எமது மக்கள் தங்களது சொந்த காணி, நலங்களை இழந்தவர்களாக, அந்தக் காணி, நிலங்களின் மிதிப்புகளை தாரைவார்த்தவர்களாக, தங்களது கோரிக்கைகளுக்கு மதிப்பின்றிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை மதிப்பீட்டு நிறுவகம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கேப்பாப்புலவு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்டெடுப்பதற்காக கடந்த 827 நாட்களாக அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம் மக்களது நியாயமான கோரிக்கைக்கு இதுவரையில் எவருமே எதுவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்வரவில்லை.

இன்று இந்த அரசாங்கத்தின் மீள்குடியேற்ற, பனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி அமைச்சு என்பது பிரதர் ஊடாக தம் வசமே இருக்கின்றது என்றும், வடக்கு அபிவிருத்தி அமைச்சை, வடக்கு – கிழக்கு அமைச்சாக மாற்றுவோம் என்றும், வடக்கு, கிழக்கில் தாங்களே சொல்வதையே மேற்படி அமைச்சு முன்னெடுக்கும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே, கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அம் மக்களது காணி, நிலங்களை விடுவிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் முடியும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. என்றாலும், அவர்களுக்கு அதில் அக்கறையில்லை என்பதையே அவர்களது செயற்பாடுகள் எடுத்துக்காட்டி வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், வலியாமம் வடக்கு, சிலாவத்துறை போன்ற பகுதிகளிலும் சொந்த காணி, நில மீட்புக்காக எமது மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுவீகரிக்கப்படாத நிலையில், பல ஏக்கர் காணிகள் பலந்தமாகவே கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையே இன்னமும் தொடர்கின்றது.

இத்தகைய காணிகள் கொழும்பு போன்ற அல்லது இன்றைய இந்த நாட்டில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பகுதிகளில் இருந்திருக்குமேயானால், அது தொடர்பில் உங்களது பார்வை நிச்சயமாக சென்றிருக்கும். ஆனால், அவை எமது பகுதிகளில், அபிவிருத்தி தொடர்பில் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற பகுதிகளில் இருப்பதால் நீங்கள் கண்டு கொள்வதில்லை.

ஆனால், எமது மக்களின் வாழ் நிலங்களாக மட்டுமன்றி, வாழ்வாதார நிலங்களுமாக அந்தக் காணி, நிலங்கள் திகழ்கின்றன.

பாதுகாப்புத் தரப்பினர் அந்தக் காணிகளில் நிலை கொண்டு, பல்வேறு வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வி கேட்டால், தேசிய பாதுகாப்பிற்காக அவர்கள் நிலை கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இங்கே, தேசிய பாதுகாப்பு என்பது கோட்டை விடப்பட்டுள்ளது.

இப்படியே நீங்கள் எதையும் மதிப்பீடு செய்யாமல், நீங்கள் மட்டுமே அனைத்தையும் வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டிருந்தால், எமது மக்கள் வேறு எங்கே போய் வாழ்வது? வாழ்வாதாரங்களைத் தேடுவது? என்று கேட்க விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: