கிளிநொச்சி முல்லைத்தீவு நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு 3 கோடி 22 இலட்சம் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, October 4th, 2021

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள நன்னீர் நிலைகள் தெரிவு செய்யப்பட்டு மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இடுகின்ற வேலைத் திட்டம் நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய 3 கோடி 22 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்,

இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 இலட்சம் 65 ஆயிரம் இறால் குஞ்சுகளும் சுமார் 2,281,314 மீன் குஞ்சுகளும் சுமார் 25 தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் இடப்பட்டுள்ளன.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, அக்கராயன் உட்பட சுமார் 7 குளங்களிலும் பருவகால நீர்நிலைகளிலுமாக 12 இலட்சம் இறால் குஞ்சுகளும் 1,389,570 இலட்சம் மீன் குஞ்சுகளும் இடப்பட்டுள்ளன.

நக்டா நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக சுமார் 40 இலட்சம் இறால் குஞ்சுகள் மற்றும் சுமார் 58 இலட்சம் மீன் குஞ்சுகளை முல்லைத்தீவு மாவட்ட நன்னீர் நிலைகளிலும் 30 இலட்சம் இறால் குஞ்சுகளையும் 50 இலட்சம் மீன் குஞ்சுகளையும் கிளிநொச்சி மாவட்ட நன்னீர் நிலைகளில் இவ்வருடம் இடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய இறால் மற்றும் மீன் குஞ்சுகளை எதிர்வரும் வாரங்களில் தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் இடுவதற்கான நடவடிக்கைகளை நக்டா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த சுமார் 700 குடும்பங்களும் நன்மையடையவுள்ளமை குறிப்பிடதக்கது.

000

Related posts: