கூட்டமைப்பின் மாநாட்டில் மக்கள் இட்ட சாபங்கள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு கொடுத்த சான்றிதழ் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, July 11th, 2019

எமது மக்களுக்கான அரசியல் உரிமை தொர்பிலான பிரச்சினைக்குரிய தீர்வு கிடைப்பதற்கு புலிகள் இயக்கம் அழிகின்ற வரையில் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், புலிகள் இயக்கம் அழிந்தும், இன்னமும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாகக் கூறுகின்ற தமிழ்த் தரப்பினர் கூறுகின்றனர்.

இந்தத் தமிழ்த் தரப்பினருக்கு இன்று இருக்கின்ற அரசியல் பலத்தை வைத்துக் கொண்டு இவர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளை மாத்திரம் கவனித்துக் கொண்டு, அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வேலையை மட்டுமே சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்களே அன்றி, எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இதுவரையில் அவர்கள் எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதை எமது மக்கள் அறிவார்கள். இந்த அரசாங்கமும் நன்கு அறியும்.

எனவே, இந்தத் தமிழ்த் தரப்பினர் தங்களது சுய நலன்கைள மாத்திரமே கருதுகின்றவர்கள் என்பதை இந்த அரசு அறிந்து கொண்டும், இவர்களை தடவிக் கொடுப்பதிலேயே காலத்தைக் கழித்து வருகின்றதே தவிர, எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நேர்மையான முன்னெடுப்புகளை தானாகவேணும் மேற்கொள்ளவில்லை என்ற கருத்து எமது மக்களிடத்தில் இருக்கின்றது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்தத் தமிழத் தரப்பினர் அண்மையில் மகநாடு நடத்திக் கொண்டிருந்த நிலையில், எமது மக்கள் – குறிப்பாக தாய்மார்கள் அந்த மகாநாட்டு நுழைவாயிலில் இருந்து இட்ட சாபங்கள் இந்தத் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளின் அரசியல் செயற்பாடுகளுக்கு எமது மக்கள் கொடுத்த சான்றிதழ் என்றே கருத வேண்டியிருக்கின்றது.

இத்தகைய சான்றிதழ்கள் நிறையவே எமது மக்களிடம் இருக்கின்றன. காலப்போக்கில் குறிப்பாக தேர்தல்களின் போது அவை இவர்களுக்குக் கிட்டும் என்றே எமது மக்கள் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

எமது மக்களின் வாக்குகளைப் பொய் கூறிப் பறித்த இவர்களால், எமது மக்களுக்கு வயிற்றெரிச்சலைத் தவிர இதுவரையில் வேறெதனையும் கொடுக்க முடியாதிருக்கின்றது எனில், எதற்காக இவர்கள் இந்த அரசை இன்னமும் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்? என எமது மக்கள் கேட்கிறார்கள்.

எமது மக்கள் வருடக் கணக்கில் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக இன்னமும் வீதிகளில் இறங்கி, அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மட்டுமன்றி, எமது மக்களுக்கு ஓர் ஆறுதல் வார்த்தையைக் கூடக் கூறுவதற்கு வக்கினை இல்லாத இவர்கள், இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே எனக் கூறிக் கொள்வதில் இன்னமும் கூச்சப்படுவதாகத் தெரியவில்லை என்றே எமது மக்கள் கருதுகின்றனர்.

எனவே, இந்த அரசு தொடர்பில் எமது மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கையானது இன்று படிப்படியாகக் குறைந்துவிட்டுள்ளது. இதற்குக் காரணமாக இந்த அரசைக் கொண்டு வந்ததாகக் கூறும் தமிழ்த் தரப்பினரும், அவர்களது ஆதரவுக்காக அவர்கள் சொல்வதைக் கேட்டு, எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்க்காதிருக்கின்ற அரசு தரப்புமே விளங்குகின்றன என்பதே எமது மக்களது கருத்தாக இருக்கின்றது என்றார்.

Related posts: