காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவில்லை -டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 8th, 2017

தேசிய பாதுகாப்பு என்பது அவசியமாகும். அதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார முக்கியத்துவமற்ற வேறு அரச காணி, நிலங்கள் நிறையவே உள்ளன. அவற்றை இனங்கண்டு பாதுகாப்பு படையினருக்கான மாற்று ஏற்பாடுகளைக் கொண்டுவர அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் காணி (பாரதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

இது தோடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இன்று முல்லைதீவு மாவட்டத்திலே, கேப்பாபிலவு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை விடுவிக்கக் கோரி 9வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வலிகாமம் வடக்கிலே இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் நிறையவே இருக்கின்றன. எமது மக்கள் இந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவில்லை. எமது மக்களது இந்த அடிப்படைப் பிரச்சினையை வைத்து தொடர்ந்து அரசியல் பிழைப்பு நடாத்திக் கொண்டிருப்பவர்கள், அரசியல் ரீதியிலான போதிய அதிகாரங்களை  கொண்டிருக்கின்ற இன்றைய நிலையிலும். அந்த காணி, நிலங்களை விடுவித்து, எமது மக்களுக்கு வழங்குவதற்கு, முன்வருவதாக இல்லை. எமது மக்களது வாழ்வாதாரங்கள் அந்த காணிகளில் தேங்கிக் கிடக்கின்றன. வளமிக்க, செழிப்பான விவசாய மற்றும் கடற்றொழில் சார் காணிகள் அங்கே மடக்கியும், முடக்கியும், மிகுந்த பயன்களைவிட குறுகிய பயன்களுக்காகவும் விடுவிக்கப்படாமல் உள்ளன.

அந்தவகையில் கேப்பாபிலவு மற்றும் பிலவுகுடியிருப்பு பகுதிகளில் சுமார் 209 குடும்பங்களது சுமார் 625 ஏக்கர் காணி, நிலங்களை விடுவிக்கக் கோரியே இம் மக்கள் தங்களது போராட்டத்தினை முன்னெடுத்து, தொடர்கின்றனர்.

தேசிய பாதுகாப்பு என்பது அவசியமாகும். அதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார முக்கியத்துவமற்ற வேறு அரச காணி, நிலங்கள் நிறையவே உள்ளன. அவற்றை இனங்கண்டு பாதுகாப்பு படையினருக்கான மாற்று ஏற்பாடுகளைக் கொண்டுவர அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

எனவே, இந்த விடயத்தையும் இனவாதமாகவோ, குறுகிய அரசியல் இலாபமாகவோ கருதாமல், குறைந்தபட்சம் மனிதாபிமான உணர்வுடன் அவதானத்தைச் செலுத்தி, எமது மக்களின் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

12 copy

Related posts: