யுத்த அழிவுச் சின்னங்களை உடனடியாக அகற்றுங்கள்  – வரவு செலவு திட்ட உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2016

யுத்தம் முடிவுக்கு வந்த காலம் முதல் வலியுறுத்தி வரப்படுகின்ற பல விடயங்களில் ஒரு விடயம் யுத்தம் நடந்த பகுதிகளில் யுத்த வடுக்களாகக் காணப்படுகின்ற சில பொருட்கள் மற்றும் கட்டடங்கள் போன்ற அழிவுகள் யுத்தச் சின்னங்களாக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுகின்ற செயற்பாடுகளை அகற்ற வேண்டியது அவசியமானதாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம்(21) 2017 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

குறித்த குதிக்குள் செல்கின்ற எமது மக்கள் மத்தியில் கடந்த காலக் கசப்புணர்வுகளை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில் இவை காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும் உல்லாசப் பிரயாணத் தலங்களாக அவை மாற்றப்பட்டு வருவதன் காரணமாகவும் எமது நாட்டு மக்களிடையே பல்வேறு உள ரீதியான தாக்கங்களை அவை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக தமிழ் மக்களிடையே தாம் தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகம் என்ற தாழ்வுணர்வுகள் மேற்படி செயற்பாடுகள் காரணமாக ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க இயலாதுள்ளது. ஆகவே, கடந்தகாலத் தமிழ்த் தலைமைகளின் தவறான வழிமுறைகள் தோற்கடிக்கப்பட்டனவே தவிர தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற உணர்வுகளை எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு ஏற்படுத்தாமல் தேசிய நல்லிணக்கம் குறித்து நாம் கதைத்துக் கொண்டிருப்பதைச் சாத்தியமற்ற ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.

எனவே, இவ்வாறான எமது மக்களின் உணர்வுபூர்வமான விடயங்களில் அதிக அவதானத்தைச் செலுத்தித் தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான பற்றுதலை எமது மக்கள் மத்தியில் உளப்பூர்வமாகக் கட்டியெழுப்பி அதனூடாக எமது மக்கள் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற ஓர் ஆரோக்கியமான நிலைமையை நாம் தோற்றுவிக்க வேண்டும் என்பதையும் இங்கு நான் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

எனவே கடந்த காலக் கசப்பான சம்பவங்களை எமது மக்களுக்கு மீள நினைவுபடுத்தாத வகையிலும் மீண்டும் அவ்வாறான ஒரு காலகட்டத்துக்குள் மக்களைத் தள்ளிவிட எண்ணிவிடாத வகையிலும் அவற்றை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இவ்வாறான செயற்பாடுகள்மூலமே எம்மால் இந்நாட்டில் இரு இனங்களுக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமான தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்ப முடியும் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

14

Related posts:

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புக் கடன் தொகையை  பொருளாதார சூழலுக்கேற்ப அதிகரி...
கொழும்பு துறைமுகத்தினை பார்வையிட்ட இரணைதீவு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!
கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதன் விளைவே குடிநீருக்கும் கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது ...