சிங்கள மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்படுவதால் தமிழரது வரலாறுகள் திரிபுபடுத்தப் படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, February 7th, 2019

பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடநூல்கள் தயாரிக்கப்படும்போது சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுவதால் அவை திரிபுபடுத்தப்படுவதுடன் இருட்டடிப்பும் செய்யப்படும் நிலை காணப்படுகின்றது. அந்தவகையில் தமிழ் மொழி மூல வரலாற்றினை மொழிபெயர்ப்பின்றி, நேரடியாகவே தமிழில் எழுதுவதற்கு தமிழ் வரலாற்று பாட பேராசான்களை – நிபுணர்களை ஏன் ஈடுபடுத்த முடியாது? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நிலையியற் கட்டளை 27/2ன் கீழான கேள்வி நேரத்தின் போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடமே இவ்வாறு கெள்வி எழுப்பினார். 

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தற்போது பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலை வரலாற்றுப் பாடநூல்களில் பல்வேறு பிழைகள், திரிபுகள் மற்றும் மூடிமறைப்புகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ் வரலாற்று பேராசான்களால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நான் நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 23/2ன் கீழ் எழுப்பியிருந்த கேள்வியின் பின்னர் இவ்விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, எதிர்காலத்தில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென அப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரால் பதிலளிக்கப்பட்டது.

பின்னர், இவ்விடயம் தொடர்பில் தமிழ் வரலாற்று பேராசான்கள், ஆலோசகர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவின் மூலமாக  பல கட்ட கலந்துரையாடல்கள் கல்வி அமைச்சில் மேற்கொள்ளப்பட்டு, திருத்தப்பட வேண்டிய விடயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கும் நான் கடிதங்கள் எழுதியிருந்தேன். இக் கடிதங்கள் பின்னர் கல்வி அமைச்சின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.  

மேற்படி கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்த காலகட்டத்தில் தமிழ் மொழி மூல வரலாற்று பாடநூல்களின் 2017ஆம் ஆண்டின் நான்காவது பதிப்பு தயார் நிலையில் இருந்ததால் அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. எனினும், 2018ஆம் ஆண்டின் 6ஆம், 10ஆம் தரங்களுக்குரிய தமிழ் மொழி மூல வரலாற்றுப் பாடநூல்களின் ஐந்தாவது பதிப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள்  எதுவும் திருத்தப்படவில்லை என்றும், 7ஆம்;, 8ஆம் தரங்களுக்குரிய பாட நூல்கள் இன்னும் வெளிவரவில்லை என்றும் தெரிய வருகின்றது.

மேலும், சிங்கள மொழியில் எழுதப்படுகின்ற வரலாற்றுப் பாடங்களே தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கப்படுவதால், பல்வேறு சிரமங்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகங்கொடுக்கின்ற சந்தர்ப்பங்களும் ஏராளமாகும் என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது. சிங்கள சொற்கள் அப்படியே மொழிபெயர்க்கப்படாமல் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன், இந்த பாடநூல்கள் பட்டப் படிப்பு, பட்டப் பின் படிப்புகளுக்கான தரத்தினையே கொண்டிருப்பதும் பாடசாலை மாணவர்களுக்கு பெரும் சிரமங்களைக் கொடுக்கின்ற கடினத் தன்மை கொண்டதாக இருப்பதாகவும் வரலாற்று பேராசான்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதே நேரம், பாடசாலை சைவ நெறி பாட நூல்களில் காணப்படுகின்ற பிழைகள், தவறுகள் தொடர்பில் நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் பிரகாரம், தற்போது வெளிவந்துள்ள 08, 09, 10ஆம் தரங்களுக்கான சைவ நெறி பாடநூலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கௌரவ அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும், உரிய அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்கள் எமது வரலாற்றினை உரிய முறையில் அறிந்து கொள்வதற்கும், அதனூடாக தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் மேற்படி வரலாற்றுப் பாடநூல்களை திருத்தி, உண்மையான எமது வரலாற்றினை பறைசாற்றும் வகையில் தயாரிக்கப்படுவது அவசியமாகும்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் பின்வரும் கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

தற்போது பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலை வரலாற்று பாடநூல்களில் காணப்படுகின்ற பிழைகள், திரிபுகள் மற்றும் மூடிமறைப்புகளை திருத்துவதற்கான நடவடிக்கை எப்போது எடுக்கப்படும்? 

தமிழ் மொழி மூல வரலாற்றினை மொழிபெயர்ப்பின்றி, நேரடியாகவே தமிழில் எழுதுவதற்கு தமிழ் வரலாற்று பாட பேராசான்களை – நிபுணர்களை ஏன் ஈடுபடுத்த முடியாது?

இதற்கென அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வரலாற்று பேராசான்களை உள்ளடக்கிய ஒரு தேசிய ஆலோசனை மற்றும் செயற்பாட்டுக் குழுவை இதுவரையில் நியமிக்க முடியாதது ஏன்?

அதே நேரம் 11ஆம் தரத்திற்கான சைவநெறி பாடசாலை பாடநூல் இதுவரையில் வெளியிடப்படவில்லையெனத் தெரிய வருகின்ற நிலையில், அதனை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க முடியுமா? மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:


உள்ளுராட்சித் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்  ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா...
ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்ச...
தனிப்பனைக் கிராமம் இரண்டாக பிரிவதை நிறுத்தித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செம்பியன்பற்று க...