கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன தீவக வைத்தியசாலைகள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி சுட்டிக்காட்டு!

Friday, September 7th, 2018

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நெடுந்தீவு பிரதேசமானது மிகவும் பின்னடைவிற்கு உட்பட்ட பிரதேசமாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இப் பிரதேசத்தினை பல வழிகளிலும் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் பல்வேறு பணிகளை முன்னெடுத்திருந்த போதிலும் பின்னரான காலப்பபகுதியில் எமக்கான போதுமானளவு அரசியல் பலமின்மை காரணமாகவும் போதுமானளவு அரசியல் அதிகாரங்கள்; வெறும் வாய்ச் சவடால்காரர்கள் வசம் சென்றதாலும் யாழ் மாவட்டத்தைப் போன்றே இப் பகுதியும் மிகுந்த பின்னடைவிற்கு உட்படலாயிற்று.

அந்தவகையில் நெடுந்தீவுப் பகுதியில் ஏராளமான பிரச்சினைகள் தலையெடுத்துள்ள போதிலும் இன்றைய தின விவாதத்திற்கு உட்பட்ட அமைச்சுக்குரியதான ஒரு பிரச்சினை தொடர்பிலான விடயத்தினையே இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

அதாவது நெடுந்தீவில் நூற்றுக் கணக்கான சிறார்கள் போசாக்கின்மை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக நெடுந்தீவிலே தோட்டச் செய்கைகள் இலை கறி வகை உற்பத்திகள், தானிய வகை உற்பத்திகள் போன்றவை மேற்கொள்ளப்படாத காரணத்தினால், இத்தகைய பொருட்களை நெடுந்தீவிற்கு வெளியிலிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனினும் அங்குள்ள மக்களின் பொருளாதார நிலை காரணமாக அவர்களால் இவற்றை அவ்வாறு பெறுவதில் சிரமங்கள் காணப்படுகின்றன. தவிர பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அங்கு பிடிக்கப்படுகின்ற கடலுணவுகள் உடனடியாகவே வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இத்தகைய நிலையிலே இங்குள்ள சிறார்களின் போசாக்கின்மையானது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

எனவே இதனை அவதானத்தில் எடுத்து கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் தரைப் போக்குவரத்து அற்ற வகையில் கடலால் சூழப்பட்டுள்ள தீவகப் பகுதி மக்களின் நலன் கருதி விஷேட ஏற்பாடாக சத்துணவு வகைகளை சிறார்களுக்கும் இலவசமாக வழங்கக்கூடிய ஒரு நடவடிக்கையினை மேற்கொண்டு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் 2015ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரச் சபைச் சட்டத்தின் கீழான கட்டளை கணக்காய்வாளர் திணைக்கள உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட விஷேட பொதுக்கூட்டம் ஆரம்பம்!
மக்களின் விருப்பத்தை சிதைக்க எந்தவொரு சக்தி முனைந்தாலும் அனுமதிக்க மாட்டேன்: செம்பியன்பற்று மக்களுக்...
கச்சதீவு கைமாறியதால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கே அதிக பாதிப்பு - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்...