கற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் – செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, October 25th, 2018

பெறுமதியில்லாத வெறும் கருத்துக்களைக் கூறிக் கூறியே இல்லாததொரு கற்பனை இராஜ்ஜியத்தை எமது மக்களுக்குக் காட்டி, எமது மக்களின் பெரும்பாலான வாக்குகளை அபகரித்தவர்கள் தங்களது சுகபோக வாழ்க்கைக்காக எமது மக்களின் நலன்களுக்கான பேரம் பேசக்கூடிய வாய்ப்புகளை வீண்விரயம் செய்து வருவதால், இன்று எமது மக்கள் இலங்கை ரூபாவின் மதிப்பைவிட பல மடங்கு வீழ்ச்சியான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நிதி, மதுவரி மற்றும் உற்பத்தி வரி சட்டமூலங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அந்நிய செவலாவணியின் ஈட்டல்கள் இன்றி இந்த நாட்டினை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்பதுபோல், அடிப்படைப் பிரச்சினைகள், அபிவிருத்தி, அரசியல் உரிமைகள் தொடர்பிலான தீர்வு என்பவை இல்லாமல் எமது மக்களின் வாழ்க்கை நிலையை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

இன்று இந்த நாட்டில் மக்களின் வாழ்வாதாரங்களை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதாக விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. மேடைகள் தோறும் பேசப்படுகின்றன. வடக்கிலும், கிழக்கிலும் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், மேற்கொள்ளப் போவதாகவும் கூறப்படுகின்றது. இவை எல்லாம் எமது மக்களுக்கு எவ்விமான நன்மைகளைக் கொண்டுதரப் போகிறது? என்பது தொடர்பில் உறுதியான நம்பிக்கையினை கொள்ள முடியாதுள்ளது.

மிதக்கும் நிலையிலுள்ள ரூபா முறைமையின் கீழ் நீங்கள் வழங்குகின்ற இந்த உதவிகள், ஏன், ஊதியங்கள், ஊதிய அதிகரிப்புகள், கொடுப்பனவுகள், நிலுவை தொகைகள், வங்கி வைப்புகள் என்பவை எல்லாமே எமது மக்களுக்கு நன்மை தரக் கூடியனவாக இல்லை. இவை எல்லாமே இன்றைய நிலையில் பெறுமதியற்ற வெறும் வெள்ளைக் காகிதங்களாகவே இருக்கின்றன.

இத்தகைய மிகவும் கொடூரமான வாழ்க்கை நிலையினை மேற்கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு இன்னுமொரு பேரிடியாகவே இந்த போதைப் பொருள் வர்த்தகமும் மாறியிருக்கின்றது. இதன் மூலமான நேரடி சமூகப் பாதிப்புகள் ஏராளமாகவே சமூகத்தினுள் திணிக்கப்பட்டு வருகின்றன.

ஆக, எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்த நாடு சீரழிக்கப்பட வேண்டுமோ? அந்தந்த வழிகளில் எல்லாம் சீரழிக்கப்பட்டு வருகின்ற நிலைமையினையே காணக்கூடியதாக இருக்கின்றது.

எனவே, கட்சி நலன்சார்ந்த அரசியலை விட்டு, மக்கள் நலன்சார்ந்த அரசியலை முன்னெடுத்து இந்த நாட்டினை அழிவுகளிலிருந்து காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

Related posts:


கிடைத்த சந்தர்ப்பங்கள்அனைத்தையும் மக்களது விடியலுக்கானதாக உருவாக்கி வெற்றிகண்டிருக்கின்றோம் - முல்லை...
இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்...
அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணை அமைச்சர் டக்ளஸ் - இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ஆகி...