கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Tuesday, December 7th, 2021

கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றினை நிறுவுவதற்கு  நடவடிக்கை மேற்கொண்டள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது இன்றைய பெரும் தேவையாக இருப்பதை சுட்டிக் காட்டியதுடன்;, இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், கூடிய விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கழு நிலை விவாதத்தில் இன்றையதினம் கடற்றொழில் அமைச்சு அதொடர்பான விவாதம் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

கடற்றொழில் கிராமங்களில் வீடமைப்புத் திட்டங்கள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை இனங்கண்டு, அவற்றை மேற்கொள்வதற்கும், கடற்றொழில் சமூகத்தினரது பிள்ளைகளின் ஈடுபாடுகளை அவதானத்தில் கொண்டு அதற்கேற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கும், அவர்களது கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மீனின உற்பத்தி குறைவு காலங்கள் மற்றும் இயற்கையினால் ஏற்படுகின்ற தொழில் பாதிப்பு காலங்களில் கடற்றொழிலாளர்களுக்கென நியாயமான ஒரு தொகை கொடுப்பனவை வழங்கக்கூடிய வகையில் கடற்றொழிலாளர்களது சேமிப்பின் ஊடாக விசேட திட்டமொன்றை அரச வங்கிகளின் ஊடாக மேற்கொள்வதற்கும், தொழில் மற்றும் உயிர் தொடர்பிலான நிலையான காப்புறுதித் திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கும், ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விரால் மீனினத்தைச் சார்ந்த பாம்புத் தலை மீன் எனப்படும் சன்னா மீன்வகை இனப்பெருக்க நிலையங்களை பொலன்னறுவை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அமைப்பதற்கும், நாரா நிறுவனம் மற்றும் கடல் சார் பல்கலைக்கழகங்களின் உதவியுடன் கடற்றொழில் சார் அலுவலர்களின் தொடர் பணி வளர்ச்சி கருதி கடற்றொழில் மேலாண்மை கற்கையில் முதுகலை டிப்ளோமா பட்டம் வழங்க அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேநேரம், எமது நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற குளங்கள், சிறு குளங்கள், நீர்த் தேக்கங்கள், பருவகால நீர்த் தேக்கங்கள்,  அனைத்தையும் பயன்படுத்தியும், கிராம தொட்டிகள் மூலமாகவும், நன்னீர் வேளாண்மையை பரவலாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

இதன் ஊடாக கிராமப் புறங்களின் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதும், மக்களுக்கு போசாக்கான உணவினை எட்டச் செய்வதும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, மக்களது வாழ்வாதாரங்களை உயர்த்துவதும் எமது நோக்கமாகும். அதேநேரம், ஏற்றுமதி இலக்கு கொண்ட உற்பத்திகளைப் பெருக்கி, எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு அதிகளவிலான பங்களிப்பினைச் செய்வதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இத்தகைய திட்டங்களுக்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சினது ஒத்துழைப்புகள் இன்றியமையாததாகும். நாங்கள் மேற்கொள்கின்ற நீர் வேளாண்மை செய்கைகள் வனஜீவராசிகளுக்கோ அல்லது சூழலுக்கோ தீங்கு விளைவிப்பதாக அமையாது. அந்த வகையில், எமது செயற்பாடுகளுக்கு இந்த அமைச்சினது ஒத்துழைப்பு தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாதிருந்த மற்றும் பயிர்ச் செய்கைக்கும், மேய்ச்சல் தரைக்கும் பொருத்தமான காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அந்தவகையில், அவருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது அமைச்சின் இந்தச் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்ற எமது இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த ககவத்த, ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், முகாமைத்துவப் பணிப்பாளர்கள், பொது முகாமையாளர்கள், திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள், ஏனைய அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் இதன்போது அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


நவீன யுகத்திலும் முகவரியற்றவர்களாகவே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும் – யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர்களுடனான சந்திப்பில்...
வடக்கு, கிழக்கில் ஆழ்கடல் தொழிலை பரவலாக மேற்கொள்வதற்கு விஷேட பயிற்சி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!