ஈ.பி.டி.பி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்- பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள்!

Thursday, September 1st, 2016

கொலைகள் மற்றும் கொள்ளைகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தொடர்புகள் இருப்பதாக சுப்பையா பொன்னையா என்பவர் கடந்த 29.08.2016 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் சில பத்திரிகையாளர்களுக்கு கூறியிருப்பதை விசாரணை செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை நேற்று (31.08.2016) அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது – இதற்கு முன்னரும் சிலர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது அவதூறுக் குற்றசாட்டுக்களை சுமத்தியிருக்கின்றார்கள். அவ்வாறான குற்றச்சாட்டுக்களையும் உரியவாறு விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்.

எமது நடைமுறைச்சாத்தியமான அரசியல் செயற்பாடுகள் காரணமாக எமது கட்சி தொடர்ச்சியான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெற்றுவருவதையும், மாகாண சபை, உள்ளுராட்சி சபைகள் என்பவற்றில் அங்கத்துவம் பெற்றுவருவதையும் தடுத்து நிறுத்தி அரசியல் பழிவாங்கவும், எம்மீது சேறுபூசவும், காழ்ப்புணர்வோடும் தூண்டுதல் பின்னணியிலுமே இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் எம்மீது சுமத்தப்படுவதாகவே கருதுகின்றோம்.

சுப்பையா பொன்னையா என்பவர் முன்னர் ரெலோ இயக்கத்திலும், சில காலம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிலும், பின்னர் வேறு சில அமைப்புக்களிலும் இருந்திருக்கின்றார். சுப்பையா பொன்னையா என்பவர் ஈ.பி.டி.பியில் இருந்தபோது ஈ.பி.டி.பியின் பெயரைத் துஸ்பிரயோகம் செய்து மக்களை மிரட்டியதாகவும், கப்பங்களைப் பெற்றதாகவும் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக சுப்பையா பொன்னையா என்பவருக்கும் ஈ.பி.டி.பிக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. இக்கால கட்டத்தில் இவர் பல மோசடிகளிலும், கொள்ளைகளிலும், கப்பம் பெறுவதிலும் ஈடுபட்டதாக பொலிஸில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்காக அவர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.

தற்போது கூட அவர் மீது, ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டில் மக்களிடம் பணமோசடி செய்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது. இந்த நிலையில் சில பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவித்திருக்கும் இந்த நபர்,

ஈழ மக்கள்ஜனநாயக கட்சியில் தான் இருந்தபோது கொலைகள் செய்ததாகவும், கொள்ளைகளில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கின்றார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது அவதூறு சுமத்தும் விதமாகவே மேற்கண்ட குற்றச்சாட்டுக்களையும் அவர் கூறியிருக்கின்றார்.

ஆனால் கொலை செய்வதும், கொள்ளையடிப்பதும், கப்பம் வாங்குவதும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கையோ, வேலைத் திட்டமோ இல்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே நாம் உறுதியோடு பின்பற்றி வந்திருக்கின்றோம்.

சிலர் ஈ.பி.டி.பியில் இருந்து கொண்டோ அல்லது ஈ.பி.டிபிக்கு வெளியே இருந்து கொண்டோ ஈ.பி.டி.பியின் பெயரைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்திருந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய விசாரணைகளையும் வெளிப்படையாகவே முன்னெடுத்திருக்கின்றோம்.

சுப்பையா பொன்னையா எனும் இந்த நபரும் கொலைகள் செய்ததாகவும், கொள்ளைகளில் ஈடுபட்டதாகவும் அவரே வாக்குமூலம் வழங்கியிருப்பதால் அது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

பத்து வருடங்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர், தற்போது கட்சி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் மற்றும் தீய நோக்கம் கொண்ட சதித் திட்டங்களும் இருக்கக்கூடுமென்று நாம் சந்தேகிக்கின்றோம்.

எனவே சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடிய சுப்பையா பொன்னையாவின் ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்றும் பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts:

யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வன்முறை செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட...
டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி நிலங்களை விடுவித்தேன்: எஞ்சிய நிலங்களையும் விடுவிப்பேன் - யாழ்ப்பாணத்தி...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் எடுத்த அதிரடி...