யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வன்முறை செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதா?

Thursday, August 23rd, 2018

யாழ்ப்பாணம் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வன்முறை செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொது நிர்வாக, முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு கௌரவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றி நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ் குடாநாட்டில் மீண்டும் சமூக விரோத செயற்பாடுகள் மிக அதிகமாகவும், பரவலாகவும் அதிகரித்துள்ளன. இத்தகைய செயற்பாடுகளைக் கட்டப்படுத்தும் வகையில் தாங்கள் அண்மையில் யாழ் குடாநாட்டுக்கான நேரடி விஜயத்தை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், யாழ் குடாநாட்டில் இத்தகைய சம்பவங்கள் குறைவின்றி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. பட்டப் பகல் நேரங்களிலும்கூட பகிரங்கமாகவே இத்தகைய வன்முறைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், யாழ் குடாநாட்டு மக்கள் சட்டம் ஒழுங்கினைப் பேணக்கூடியவர்கள் மீது முழுமையாகவே நம்பிக்கை இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்த வகையில் யாழ் குடாநாட்டில் பரவலாக வாள்வெட்டு, கொள்ளை, வல்லுறவு, வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு தீ வைப்பு, வர்த்தகர்கள் மீதான அச்சுறுத்தல்கள்  போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரைக்கூட மருத்துவமனைக்கே சென்று தாக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அதே நேரம், கடந்த 30ஆம் திகதி யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை ஜே – 100 கிராம சேவையாளர், ஒரு குழுவினரால் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இத்தகைய வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நபர்கள் கைது செய்யப்படாத நிலையும் தொடர்வதாகவே எமது மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சில நபர்கள் கைது செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும், அந்த நபர்கள் உண்மையிலேயே மேற்படி சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவர்களா? என்ற சந்தேகமும், மேற்படி சம்பவங்களுடன் தொர்புடையதாக ஆதாரங்களுடன் கைது செய்யப்படுகின்ற நபர்களை சட்டத்தரணிகளான உள்ளூர் அரசியல்வாதிகள் காப்பாற்ற முன்வரும் நிலைமைகளும் இருப்பதால், இத்தகைய அரசில்வாதிகளுக்கும் மேற்படி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புகள் இருக்குமோ என்ற சந்தேகமும் எமது மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் தற்போது வட்டுக்கோட்டை, அராலி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வகை குள்ள மனதர்களின் சமூக அச்சுறுத்தல் செயற்பாடுகள் இரவு வேளைகளில் – குறிப்பாக – இரவு 7 மணி தொடக்கம் விடியும் வரையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாலும் எமது மக்கள் பெரும் பதற்றத்துடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் ‘கிறீஸ் பூதம்’ கிளம்பி எமது மக்களை பற்றத்துக்கு உள்ளாக்கியிருந்த நிலையில்,  நேரடியாகவே அரசுடன் கலந்துரையாடப்பட்டு, அந்த செயற்பாடு இல்லாதொழிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ‘குள்ளர்’ வேலைத்திட்டமும் ‘கிறீஸ் பூதம்’ போன்றதொரு செயற்பாட்டின் பின்னணியா? என்ற சந்தேகம் எழுகின்றது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் கருத்து கூறுகின்ற சிலர், இது ஏதோ தமிழ்த் திரைப்டப் பாணியிலான தாக்கங்கள் எனக் குறிப்பிடுவதை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் ஏதேவொரு சக்தி மறைமுகமாக இயங்குவதாகவே தெரிய வருகின்றது. அந்த வகையில் இத்தகைய வன்முறைக் குழுக்கள் செயற்படுகின்றனவா? அல்லது, செயற்படுத்தப்படுகின்றனவா? என்ற கேள்வி எழுகின்றது.

தென்பகுதியிலும் கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காண முடிகின்ற போதிலும், யாழ் குடாநாட்டில் இத்தகைய வன்முறைச் செயற்பாடுகள் திட்டமிட்டே மேற்கொள்ளப்படுவதாகவே தெரிய வருகின்றது. அந்த வகையில்,

  • யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வன்முறை செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதா?
  • மேற்படி வன்;முறைச் செயற்பாடுகளுடன் போதைப் பொருள் கடத்தல்கார்களுக்கு, போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு இருக்கின்றதா?
  • மேற்படி வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொடர்புகள் ஏதும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதா?
  • யாழ் குடாநாட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்ற குள்ள மனிதர்கள் தொடர்பில் ஆராயப்பட்டு, உரிய நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனரா?
  • மேற்படி சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் உரிய பயன்களை அளிக்காமையினால் இத்தகைய சம்பவங்கள் அதிகளவில் தொடர்கின்றன என்பதால், இத்தகைய சம்பவங்களை கட்டப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் என்ன எனக் கருதுகின்றீர்கள்? அத்தகைய உரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றனவா?
  • யாழ் குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை பேணுவதில் அசிரத்தையாக இருக்கும் அல்லது திறமை, ஆளுமையற்றிருக்கும் பொலிஸ் அதிகாரிகளை மாற்றி, திறமையும், ஆளுமையும் கொண்ட அதிகாரிகளை நியமித்து, இப்பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதா? என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம், கொக்குவில், செம்பியன் ஒழுங்கையிலுள்ள மருத்துவர் இம்மானுவேல் சாந்தகுமார் என்பவரது வீட்டுக்குள் வாள்கள், பொல்லுகள், கூரிய ஆயுதங்களுடன் நுழைந்துள்ள குழுவினர் வீட்டுப் பொருட்களை சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டாருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். எனவே இத்தகைய வன்முறைச் செயற்பாடுகள் தொடர்வதையே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. மேற்படி மருத்துவர் வீட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கோரிய டக்ளஸ் தேவானந்தா இத்தகைய வன்முறைகள் யாழ் குடாநாட்டில் மீண்டும், மீண்டும் இடம்பெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மிகவும் அவதானத்துடன் எடுக்கப்பட வேண்டியத் தேவையும் இருக்கின்றது. ஆரம்பத்தில் அவதானமில்லாமல் எடுக்கப்பட்ட சில தான்றோத்தித்தனமான நடவடிக்கைகளே பிற்காலத்தில் பாரிய அழிவை நோக்கிய செயற்பாடுகளுக்கு வித்திட்டிருந்தன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. வடக்கு மாகாணத்தில் போதியளவு தமிழ் மொழி மூலப் பரிச்சயமுள்ள பொலிஸார் கடமையாற்றுவது இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் விளக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts:


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது சத்தியப்பிரமாண வைபவம் ஆரம்பம்!
இரணைமடு குளத்தால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் – நாடாளுமன்...
கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்தப்பட வேண்டும்...