கடற்றொழிலாளர்கள் இடைத் தரகர்களினால் சுரண்டப்படுகின்றனர் – யாழில் சுட்டிக்காட்டு!

Saturday, February 6th, 2021

யாழ். மாவட்டத்தின் முதன்மையான ஏற்றுமதிப் பொருளாக கடலுணவுகள் காணப்படுகின்ற போதிலும்  இடைத் தரகர்களினால் சுரண்டப்படுதல் போன்ற சில காரணங்களினால் கடற்றொழிலாளர்களுக்கு பூரணமான பலன் கிடைக்கவில்லை என்று  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று(06.02.2021) யாழ். செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பொருளியல் ஆய்வாளர் கலாநிதி அகிலன் கதிர்காமநாதனினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

மேலும், யாழ். மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற கடலுணவுகளை கொண்டு செல்வதற்கான செலவையும் நேரத்தினையும் குறைப்பதுடன் நவீன தொழில்நுட்பத்தினையும் உள்வாங்கும் நோக்குடன் கொழும்பிற்கான புகையிரதத்தில் குளிரூட்டி பெட்டி ஒன்றை இணைத்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்ற முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், கடற்றொழில் சமாசங்களின் ஊடாக கிராமிய கடன் திட்டங்களை அறிமுகப்டுத்துவதன் மூலம், நுண்கடன் திட்டத்திலிருந்து கடற்றொழில் சார் குடும்பங்களைப் பாதுகாக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, கிராமிய கடற்றொழிலாளர் அமைப்பு, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புக்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் கடற்றொழிலாளர்கள் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதால் இரண்டு அமைப்புக்களும் ஒரு அமைப்பாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

குறித்த விடயங்கள் தொடர்பாக கருத்துதெரிவித்த கடற்றொழில் அமைச்சர், கடலுணவுகளை ஏற்றுவதற்கான குளிரூட்டிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த குளிரூட்டி வசதியை புகையிரதத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று கடற்றொழிலாளர் சங்கங்கள் இரண்டு இருப்பதனால் ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து கொள்வதாவும் இரண்டு  அமைப்புக்களையும் இணைப்பது தொடர்பாக ஆராய்ந்துவருவதாக தெரிவித்ததுடன் கிராமிய கடன் திட்டம் தொடர்பாக பொருளியல் ஆய்வாளர் கலாநிதி அகிலன் போன்றவர்களுடன் கலந்துரையாடி சிறந்த பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்...
கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகா...
அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...