கடன் சுமை நாட்டுக்கு பெரும் நெருக்கடியை தரப்போகின்றது – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!

Tuesday, October 9th, 2018

அரச உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்களும் அதனது தவணை முறை செலுத்துகைகளும் நாட்டுக்கு சுமையாக இருக்கின்றன. அதாவது மொத்த தேசிய உற்பத்திக்கு சமாந்திரமாக எடுத்துக் கொண்டால் சுமார் 80 சதவீதமான கடன் பளு இருந்து வருகின்றது. சுமார் 5 பில்லியன் டொலர்கள் இந்த வகையில் அடுத்த வருடம் முதல் செலுத்துகை மேற்கொள்ள வேண்டியுள்ளன. இந்த வருடம் அதற்கான தயார் நிலை வருடமாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் 2018ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை தொடர்பான அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அதாவது ‘விடிய விடிய இராமாயணம். விடிந்தால் ராமன் சீதைக்கு என்ன முறை?’ எனக் கேட்பதுபோல் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் நீங்கள் நாள்தோறும் கதைத்தும் விவாதித்தும் இறுதியில் இப்போது என்ன செய்வது? எனத் திண்டாட வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.

சர்வதேச நாயண நிதியம் இலங்கையுடன் கொண்டுள்ள நீடித்த நிதி வசதியொன்றுக்கான ஆதரவளிக்கும் திட்டத்தின் மூலமாக மேற்படி கடன்கள் முகாமைத்துவப்படுத்தப்பட்டு வந்தாலும் இது ஒரு விடுதலைக்கான வழியன்றி, நெருக்கடி மிகுந்த நிலை என்பது காலப்போக்கில் தெரிய வரும் என்றே எண்ண வேண்டியுள்ளது. அதேநேரம் இந்த சர்வதேச நாணய நிதியம் கூட மேற்படி திட்டத்தின் ஊடான தனது 5வது கலந்துரையாடலில்கூட பொருளாதார மறுசீரமைப்பையே இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரச மீண்டெழும் செலவினம் தொடர்பில் பாரக்கின்றபோது அதுவும் கடந்த ஆண்டின் அரையாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 59497 மில்லியன் ரூபா அதிகரிப்பினையே இந்த வருட காலாண்டில் காட்டுகின்றது. அதேபோன்று ஊதியங்கள் ஓய்வூதியங்கள் என எல்லாமே அதிகரித்து அரசாங்கத்தினால் இச் செலவினங்களை தாங்க இயலாத நிலையேற்பட்டு அதுவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய செலவினங்கள் தொடர்பிலான முகாமைத்துவமின்மை காணப்படுகின்றது.

மேலும் நட்டத்தில் இயங்குகின்ற அரச நிறுவனங்கள் – அதிக பணியாளர்களையும் குறைந்த பயன்களையும் கொண்டதாக செயற்பட்டு வருகின்றன.

மறுபக்கத்தில் வரி அறவீடுகள் என்கின்றபோது சாதாரண மக்களிடமிருந்து பெறப்படுகின்ற வரிகள் செல்வந்தர்களிடமிருந்து நீங்கள் குறிப்பிடுகின்ற வகையில் அனைத்து வழிகளிலும் ஒழுங்குற அறவிடப்படுகின்றதா? என்பது தொடர்பில் இன்னும் தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது.

எனவே இந்த நாட்டின் பொரளாதார நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டுமெனில் உடனடி – நடைமுறைச் சாத்தியமானதொரு வழிமுறைக்கு வந்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் இதே வகையில் மந்த நிலையில் செல்வோமேயானால் இருண்ட யுகமானது மிக அருகாமையிலேயே இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.

Related posts:

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியு...
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...