கடவைப் பாதுகாவலர்களுக்கு பொருத்தமான சம்பளமும், போதுமான ஆளணியும் தேவை!

Thursday, September 21st, 2017

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துச் சட்டங்களின் பேணுதல்களையும், நடைமுறைப் படுத்துகையையும், மீறல்களையும், இதன் காரணத்தினால் ஒவ்வொரு நாளும் எத்தனை உயிர்கள் நமது நாட்டில் காவுகொள்ளப்படுகின்றன என்பன பற்றியும், நாம் இலத்திரனியல் ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களின் மூலமாகவும் அறிந்த வருகின்றோம்.

இச்செய்திகள் பல அதிர்ச்சியான தகவல்களையும், அதிசயமான முறையில் விபத்துக்களில் இருந்து உயிர் தப்புவதையும் நாளாந்தம் தெரிவிக்கின்றன. நமது நாட்டில் நாளொன்றிற்கு சராசரியாக (10) பத்துப் பேர்வரை போக்குவரத்து விபத்துக்களில் மரணமடைகின்றனர் என்றும் தெரியவருகின்றது.

இச்சந்தர்ப்பத்தில், வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் ஏற்படுகின்ற விபத்துக்கள் பற்றி பலமுறை நான் இச்சபையில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்.

நீண்ட காலத்திற்குப் பின்னர் புகையிரதச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதால், புகையிரதக் கடவைகளில் எவ்வாறு போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும், அதற்கான எச்சரிக்கை சமிக்ஞைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதையும் பாதசாரிகள் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு இன்னும் அதிக காலம் எடுக்கக்கூடும்.

எனவே ஏற்படும் விபத்துக்களைக் கவனத்தில் கொண்டு வடக்கில் புகையிரதக் கடவைகள் முறையாக அமைக்கப்பட்டிருப்பதையும், அதில் கடமை புரிவோர் விழிப்பாகவும், கடமை உணர்வோடும் பணியாற்றுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 203ஆம் அத்தியாயமான மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

புகையிரதக் கடவைப் பாதுகாவலர்களுக்குப் பொருத்தமாக சம்பளம் கிடைப்பதும், தேவையான ஆளனிகள் நிரப்பப்படுவதும் அவசியமாகும்.

அவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுத்து நிறுத்த முடிவதுடன், பெறுமதியான மனித உயிர்களையும், காப்பாற்றமுடியும்.

இது தவிரவும் தென் இலங்கையிலிருந்து வவுனியா வரையான வடமாகாணத்தின் புகையிரதப் பாதைகள் நீண்ட காலம் பாவனையில் இருந்தபோதும், அவை போதுமான பராமரிப்புச் செய்யப்பட்டிருக்கின்றதா? என்பதை ஆராய வேண்டும். சிலிப்பர் கட்டைகள், தண்டவாளங்கள் என்பவற்றின் தரம் பரிசோதிக்கப்பட்டு தேவையான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதேவேளை நேர தாமதங்களைச் சமாளிப்பதற்காகக் கடுகதிப் புகையிரதங்கள் சில வேளைகளில் வேகக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் பயணங்களைச் செய்வதாக பொது மக்கள் கருதுகின்றனர்.

அவ்வாறான நிலைமையும் கூட விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துவிடக் கூடும் எனவே அவ்விடயத்திலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

Related posts:

யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தாவிடம் முழ...
இலட்சியத் தேரின் வடம்பிடிக்க மக்கள் எழுந்துவர வேண்டும் - புத்தாண்டுச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு - அமைச்சர் டக...

சிதைந்துகிடந்த வர்த்தகத்துறையை தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா - சாவகச்சேரி வர்த்தக சங்கம் !
திருமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை...
அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ் தலைமைகளுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு...