வாக்குறுதிகளுக்கு செயலுருவம் கொடுத்தவர்கள் நாம்  – கட்டைக்காட்டில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 6th, 2018

சர்வதேசத்திற்கு ஒற்றுமையைக் காட்டுவோம் எமது பலத்தை அவர்களுக்கு எடுத்துரைப்போம் என்றெல்லாம் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்கள் அடைந்த பயன்கள் தான் என்ன என்று டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தேர்தல் காலங்களில் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு தமது செயற்பாடுகளை முன்வைத்து தேர்தல்களில் வெற்றிபெறுவது அவர்களது வழமையான செயற்பாடு. அந்த வகையில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் தமது நோக்கை நிறைவேற்றும் பொருட்டும் மக்களை ஏமாற்றும் விதமாக வஞ்சகத்தனமான வாக்குறுதிகளை அவர்களிடம் அள்ளி வழங்கி வாக்குகளை அபகரித்து வந்திருக்கிறார்கள்.

கடந்தகாலத் தேர்தல்களின் போது எமது ஐக்கியத்தை  சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவோம் எங்கள் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைப்போம் என்றெல்லாம் கூறிய கூட்டமைப்பினர் கடந்த பொதுத் தேர்தலின் போது காணாமல் போனோரை கண்டுபிடிப்போம், இராணுவத்தை முற்றாக வெளியேற்றுவோம், காணி நிலங்களை விடுவிப்போம், அரசியல் கைதிகளை விடுவிப்போம், அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணுவோம் என்று உறுதிபடச் சொல்லி வெற்றி பெற்றார்கள். ஆனால் அதன் பின்னர் மக்கள் அவர்களைத் தேடிச்செல்லும் நிலையில் அவர்கள் ஒழித்துக்கொண்டார்கள்.

வாக்குறுதிகள் என்பது வெறும் வாய்சொல்லில் மட்டும் இருக்காது அது செயல்வடிவம் பெறவேண்டும். நாம் செயல்வடிவிலேயே மக்களுக்கான சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதுவே எமது கடந்தகால நிகழ்கால செயற்றிட்டமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்தும் நாம் அதிகளவான சேவைகளை மக்களுக்காக பெற்றுத்தர மக்களது அதிகரித்த பலம் ஒன்றே பிரதானமானது. அந்த மக்கள் பலம் இம்முறை எமக்கு கிடைக்கும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே கட்டைக்காடு,  வெற்றிலைக்கேணி விநாயகபுரம், வெற்றிலைக்கேணி முள்ளியான், உடுத்துறை, மருதங்கேணி, மாமுனை மற்றும் குடத்தனை ஆகிய இடங்களிலும் இந்த மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலஞ்சம் ஊழல் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு இன்று என்ன நடந்துள்ளது? - டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
நீர் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைளை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை - கடற்றொழில் - நீர்வேளாண்மையை முன்னகர்த்த மற்றுமொரு முன்னெடுப்பு!