எரிபொருள் தட்டுப்பாடு – பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Friday, October 7th, 2022

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கும் பொறிமுறை தயாரிக்கப்பட்டு வருவதாக இன்று(07.10.2022) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், “மண்ணெண்ணெய்யின் விலையேற்றம் என்பது சிறு தொழில் கடற்றொழிலாளர்களுக்கு பெரிதும் இக்கட்டானதொரு நிலைமையை தோற்றுவித்திருக்கின்றது. நான் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள கடற்றொழிலாளர்களை நேரில் சென்று சந்தித்து, கலந்துரையாடிய நிலையில், அவர்கள் தங்களது நிலைமைகளை நேரடியாகவே எடுத்துக் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இக் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் நான் கௌரவ ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடியதன் பயனாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் பொருளாதார வசதி குறைந்த கடற்றொழிலாளர்களுக்கும், அதேநேரம், மின்சார வசதியற்ற மலையக மக்களுக்கும் மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்கவென 5000 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியிருக்கிறார்.

அதேநேரம், மண்ணெண்ணெய் பற்றாக்குறை மற்றும் மண்ணெண்ணெய் இல்லாத காலகட்டத்தில் இக் கடற்றொழிலாளர்கள் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக கடற்றொழிலில் ஈடுபடாதிருந்தனர். அதற்கெனவும் நாம் விசேடமாக நிவாரணம் வழங்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கின்ற வகையில் ஒரு தொகை கொடுப்பனவினை மேற்படி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்கென கடற்றொழில் அமைச்சு ஒரு கடற்றொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கப்படக்கூடிய தொகை, காலகட்டம் உள்ளடங்கலாக ஒரு பொறிமுறையை வகுப்பது தொடர்பில் திறைசேரியுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

வெகுவிரையில் எதிர்வரும் மாதங்களில் அதனை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த செயற்பாட்டின்போது முறைகேடுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் அவதானமாக இருக்கின்றோம். இதன் காரணமாக இந்த செயற்திட்டத்தினை வகுப்பதில் சில காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளது” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார். – 07.10.2022

Related posts: