எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் – கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா!

எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி உதயநகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஏனைய சக தமிழ்க் கட்சிகளைப் பார்க்கிலும் நாம் அரசியல் நிலைப்பாடுகளில் பல்வேறு மாற்றங்களையும் கொள்கைகளையும் கொண்டிருக்கின்றோம்.அவையாவும் எமது மக்களின் நலன்சார்ந்தே கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் எதிர்காலங்களிலும் அவ்வாறே முன்னெடுக்கப்படும்.
எமது மக்கள் யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளபோதிலும் தமது சொந்த வாழிடங்களிலும் மீள் குடியேறாமல் இற்றைவரை நலன்புரி முகாம்களிலும் உறவினர் நண்பர்களது விடுகளிலும் தமது நாளாந்த வாழ்வை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்துவருகின்றனர்.
அந்தவகையில் எமது மக்கள் தத்தமது சொந்த நிலங்களில் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழும் சூழல் உருவாக்கப்படவேண்டும். அந்த நல்ல தருணத்திற்காக நாம் எப்போதும் அர்ப்பணிப்போடும் அக்கறையோடும் உழைத்து வருகின்றோம்.
இதனிடையே நல்லாட்சியைக் கொண்டு வந்தவர்கள் நாமே என்றும் மக்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவோம் என்றும் கூறியே போலித்தேசியவாதம் பேசியவர்கள் இன்று மௌனித்து இருக்கின்றார்கள். அவர்களது உணர்ச்சிப் பேச்சுக்களும் உசுப்பேத்தல்களும் எமது மக்களுக்கு ஒருபோதும் தீர்வுகளைப் பெற்றுத்தரப் போவதில்லை. ஆனால் எமது மக்கள் நம்பிக்கையே வாழ்க்கை என்ற அடிப்படையில் எமது கட்சியை நம்பி வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்களேயானால் நிச்சயம் உங்கள் கனவுகளை நாம் நனவாக்குவோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|