என்னை விமர்சிப்பவர்கள் முதலில் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும் – இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ்வில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, February 24th, 2019

மக்கள் தரப்பில் இருந்த எதுவித உள்நோக்கமும் இன்றி என்னை விமர்சிக்கும் எவரது விமர்சனத்தையும் ஏற்க நான் தயாராகவே இருக்கின்றேன். ஆனால் அரசியல் தேவைகளுக்காகவும் தமது சுயநலன்களுக்காகவும் விமர்சனங்களை முன்வைத்தால் அதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் ஏற்பாட்டில் துணிச்சலுள்ள அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளதுள்ளதுடன் மக்களால் இந்து சமயம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கும் பதில்களை வழங்கி கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்களுக்கு ஆரோக்கியமான முறையில் யாரையும் விமர்சிக்கும் உரிமை உண்டு. ஆனால் இதர தமிழ் அரசியல் தரப்பினர் தமது சொந்த நலன்களுக்காகவும் அரசியல் இருப்புக்காகவும் எம்மை நோக்கி விமர்சனம் முன்வைக்கும் போது அல்லது விமர்சிக்கும் போது முதலில் அவர்கள் தம்மை தாமே திருத்திக்கொண்டு எம்மீது விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான முடிவுகளை எட்டமுடியும்.

கடந்த காலங்களில் நான் இந்து / சைவ சமயங்களுக்கு பல்வேறு சேவைகளை பெற்றுக் கொடுத்திருந்திருக்கின்றேன். இந்து / சைவமத வரலாறுகளில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல வரலாற்று சான்றுகளை மீளவும் பாடப் புத்தகங்களில் கொண்டுவந்திருக்கின்றேன்.

அதேபோல நான் இந்துகலாசார அமைச்சராக இருந்தபோது வடக்கில் யுத்தத்தால் அழிந்துகிடந்த குறிப்பாக அன்று புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆலயங்களையும் மீளவும் புனரமைத்து கட்டியெழுப்பவென பல ஆயிரம் கோடி நிதிகளை பெற்றுக்கொடுத்து அழிந்துகிடந்த சமய தலங்களை மீளவும் புத்தாக்கம் செய்திருந்தேன்.

அறநெறியை, நுண்கலை துறையை வளர்க்கவும் சமய விழுமியங்களை பேணிப்பாதுகாக்கவும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொடுத்திருக்கின்றேன். இன்றும் அதை நான் முன்னெடுத்து வருகின்றேன்.

நான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக நேசித்தே தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகின்றேன். அவ்வாறான மக்களுக்கான சேவைகளை செய்வதே எமது கொள்கையாகும். ஆனால் அரசியல் பலம் இருந்தும் இதர தமிழ் அரசியல் தரப்பினர் அவ்வாறு செய்வதாக தெரியவில்லை. இதுவும் எமது சமய கலாசாரங்கள் தடம்பிறழ்வதற்கு வழிவகை செய்வதாக தெரிகின்றது.

எமது பிரதேசத்தில் எமது இளைஞர் யுவதிகளுக்கே அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என நான் நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதுடன் நான் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோதும் அதை நடைமுறையில் செய்தும் காட்டியிருந்தேன்.

அனால் இன்று அவ்வாறு இல்லை. நான் அவ்வாறு கூறுவது இனவாதமாகிவிடாது. ஏனெனில் எமது இனத்தின் உரிமையையே நான் அவ்வாறு கோருகின்றேன்.

அதுமட்டுமல்லாது இந்து சமய அல்லது சைவசமய கற்கையை பல்கலைக்கழகத்தில் ஒரு தனியான பீடமாக அமைத்து எமது மாணவர்கள் கல்வி கற்பதற்கான வழிவகைகளை நான் அண்மையில் குறுகிய காலத்தில் அமைச்சராக இருந்தபோது முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

ஆனால் ஆட்சி மாற்றம் அதனை தடுத்துவிட்டது. நிச்சயம் நான் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வெகுவிரைவில் வருவேன். அப்போது இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத தீர்வை கண்டுதருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அந்தவகையில் மக்களுக்கான சேவைகளிலோ அன்றி மதங்கள் சார்ந்த சேவைகளிலோ என்னை நோக்கி விமர்சனங்களை முன்வைக்க இடமிருக்காது என்றே கருதுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருக்கின்றது
வடக்கில் உப தபாலகங்களுக்கு காணி இருந்தும் கட்டிடங்களை அமைத்துக் கொள்ளமுடியாமல் உள்ளது ஏன் - நாடாளுமன...
மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ...