தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே இந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2019

இந்த நாடு, ஏற்கனவே பொருளாதார நிலைமையில் பாரிய விருத்தியினைக் கண்டிருந்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் திடீரென பொருளாதார ரீதியில் வீழ்ச்சியுற்ற நாடல்ல. ஏற்கனவே நலிந்த பொருளாதார நிலைமையினைக் கொண்டிருந்து, மேற்படித் தாக்குதல் அனர்த்தத்தின் காரணமாக மேலும் வீழ்ச்சியுற்றிருக்கின்ற நாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விஷேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஒரு குறிப்பிட்ட சிறு தொகையினர் தவிர்ந்து, இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கனவே சுகபோகமான வாழ்க்கை அல்லாவிடினும், மூன்று வேளை சுத்தான உணவுகளை உண்டு, ஏனைய அடிப்படை வசதிகளையும் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்திருந்த நிலையில், மேற்படித் தாக்குதல் அனர்த்தத்தின் பின்னர், திடீரென துன்ப, துயரங்களுக்குள், பொருளாதார பாதிப்புகளுக்குள் விழுந்தவர்களும் அல்லர். இம் மக்கள் தொடர்ந்து பல வருடகாலமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, துன்ப, துயரங்களுக்குள் முடங்கிப் போயிருக்கின்ற நிலையிலேயே தற்போது இந்த பாரிய பாதிப்புகளும் அம்மக்களது தலைகளில் இடிந்து விழுந்திருக்கின்றது.

இந்த நிலையில், மக்களது வாழ்க்கை நிலைமையினைக் கருத்தில் கொண்டதாகவே அத்தியாவசிய மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களின் விலைகள் மாற்றம் பெற வேண்டிய ஒரு நிலை மிகவும் அத்தியாவசியமாகின்றது.

அண்மையில் இந்த நாட்டில் ஏற்படுத்தப்படுத்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்கல் தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படுதலும், இந்த நாட்டில் இனியும் அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறாத வகையில், தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதும் அத்தியாவசியமாகும். எனினும், மேற்படி தாக்குதலை முன்வைத்தே நாட்டின் ஏனைய பிரச்சினைகளை மறைத்து வைக்காத வகையில் இந்த அரசின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இன்றைய காலகட்டமானது, பெரும்பாலான மக்களுக்கு தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்ள இயலாத நிலைமையினை உருவாக்கிவிட்டுள்ளதால், முதலில் அந்த நிலைமையினை மாற்றி, நாட்டில் சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும். அந்தச் சூழலானது வெறும் வாய் வார்த்தைகளால் – அறிக்கைகளால் அன்றி நடைமுறை ரீதியிலாக மக்கள் முன் பகிரங்கமாக நிலை நிறுத்தப்படல் வேண்டும்.

இந்த நாட்டில் இப்போது அனைத்து மக்களிடையேயும் மறைமுகமானதொரு அச்சம் நிலை கொண்டிருக்கின்றது. எந்த நேரத்தில், என்ன நடக்குமோ? என்ற பீதி மக்கள் மத்தியிலிருந்து முழுமையாக இன்னும் அகன்றுவிடவில்லை.

இந்த நிலையில் குறிப்பிட்ட மக்கள் அரச மற்றும் ஏனைய பணிகளில் ஈடுபடுவதும்கூட ஏதோ ஒருவித இயந்திரத் தன்மையைப் போல்தான் காணப்படுகின்றதே அன்றி மக்கள் விருப்புடன் பணிகளில் ஈடுபட்டு வருவதாக காண முடியவில்லை. அந்த வகையில், அதன் ஊடான உழைப்பு என்பது எந்தளவிற்கு பயனாக அமையும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

எனவே, இது ஏதோ இயல்பு நிலை நாட்டில் நிலவுகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதற்குரிய ஒரு கண்காட்சியைப் போல் தென்படுகின்ற நிலையில், இதனை நம்பி உல்லாசப் பிரயாணிகள் இந்த நாட்டுக்கு வெகு விரைவில் வருவார்களா? என்ற கேள்வி எழுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: