இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்!… பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 13th, 2017

 

மாற்றங்களை உருவாக்க விரும்பாமல் வதைகளை மட்டும் சுமத்திய மாய மான்களை பின் தொடர்ந்து ஓடுவதால் எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் ஒரு போதும் நிறைவேறாது. நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே என்று கூறும் எமது மக்களின் ஆன்மீக சிந்தனைகளின் வழிகாட்டாலே எமக்கு மதிநுட்ப சிந்தனைகளை தந்திருக்கின்றன. உண்மை வழிநின்று மகத்தான அரசியல் சமூக பொருளாதார வெற்றிகளை நாம் படைப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் –

எமது பாரம்பரிய வரலாற்று வாழ்விடங்களிலும்  புலம்பெயர் தேசங்களிலும் எமது மக்கள் வாழும் ஒவ்வொரு  இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கிட,..

பிறந்து வரும் தைப்பொங்கல் திருநாளை நாம்  வலிமையுள்ள புதிய நம்பிக்கையோடு வரவேற்போம்.

தைப்பொங்கல் தினத்தை உழவர் திருநாள் என்றும், தமிழர் பெருநாள் என்றும் எமது மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று காலந்தோறும் கொண்டாடி வருகின்றார்கள்.

இயற்கையை வணங்கிய எமது முன்னோர்களின் வரலாற்று பாரம்பரியங்களை பின்பற்றி எமது மக்கள் சூரியனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஓர் உன்னத தினம் இது!

எமது வரலாற்று பண்பாட்டு அடையாளங்களை பாதுகாக்கும் தினம் இது!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த நம்பிக்கையின் உறுதியுடனேயே எமது மக்கள்
ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்தையும் தமது இல்லங்கள் தோறும்கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.

பழையன கழிந்து, புதியன யாவும் புகுந்து தமது வாழ்வெங்கும் புது மகிழ்ச்சி பூத்துக்குலுங்க வேண்டும் என்ற எமது மக்களின் கனவுகள் யாவும் நிறைவேற வேண்டும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் படியும் வெல்லும் என்ற எமது மக்களின்
நம்பிக்கைகள்  நிறைவேற வேண்டும்.

எமது மக்களின் வாழ்வின் மீது பேரவலங்களை சுமத்திய போர்ச்சூழலும், கொடிய வன்முறைகளும் இங்கு ஒழிந்து போனாலும், போரின் வடுக்கள் இன்னமும்
முழுமையாக தீர்ந்து போகவில்லை.

எந்த இலட்சிய கனவுகளுக்காக இத்தனை இழப்புகளோடும் எமது மக்கள் அம்புகள் தைத்த மான்களாக துடி துடித்து மாய்ந்தார்களோ, … அந்த இலட்சிய கனவுகள் இங்கு விரைவாக ஈடடேற வேண்டும்!

எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம்!இன்னமும் மீட்கப்படாத எமது மக்களின் நிலங்கள் தொடர்ந்தும்  மீட்கப்பட வேண்டும்.

இது வரை மீள்குடியேறிய எமது மக்கள் மேலும் பெற வேண்டிய வாழ்வாதார உரிமைகளை அனுபவித்து மகிழ வேண்டும்.

இயற்கையின் அனர்த்தங்களோடு போராடி சதுப்பு நிலங்களிலும் சகதி மண்ணிலும் துன்பியல் வாழ்வை தாங்கி நிற்கும் எமது மக்கள் அனைவருக்கும் வாழ்வதற்குரிய சொந்த வீடுகள்
வேண்டும்.

சிறைகளில் இருந்து இன்னமும் மீண்டு வராமல் எஞ்சியிருக்கும்ஏனைய எமது உறவுகளும் விரைவாக விடுதலை பெற்று வரவேண்டும்.

வறுமையில் வாடும் கொடுமைகள் நீங்கி சகல மக்களும் வாழ்வாதாரமும் வாழ்வின் எழுச்சியும் பெற்று தலை நிமிர வேண்டும்.

எமது மக்கள் உழைப்பதற்கான உரிமைகள் வேண்டும்.

உழைப்புக்கு ஏற்ற ஊதியங்களை அவர்கள் பெறவேண்டும்.

எமது கடல் எல்லை வளங்களில், எமது விவசாய நிலங்களில்சுதந்திரமாக தொழில் புரியும் உரிமை எமது மக்களுக்கு இருக்க வேண்டும்.

காலத்துயர்களை சுமந்து நிற்கும் எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் தோறும் அரசியல் மாற்றமொன்று நிகழ வேண்டும்.

மாற்றங்களை உருவாக்க விரும்பாமல் வதைகளை மட்டும் சுமத்திய மாய மான்களை பின் தொடர்ந்து ஓடுவதால் எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் ஒரு போதும் நிறைவேறாது.

நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே என்று கூறும் எமது மக்களின் ஆன்மீக சிந்தனைகளின் வழிகாட்டாலேஎமக்கு மதிநுட்ப சிந்தனைகளை தந்திருக்கின்றன

உண்மை வழிநின்று மகத்தான அரசியல் சமூக பொருளாதார வெற்றிகளை நாம் படைப்போம்.

கல்லோடு கட்டி கடலிலே வீசினாலும் படகாக நாம் மிதப்போம் என்ற ஆழ்மன உணர்வோடு
எமது மக்கள் எழுச்சியுற்று வர வேண்டும்.

மாற்றங்களை உருவாக்க முடியாத தொன்று தொட்ட பழைய அரசியல் வழிபாடுகளை முழுமையாக கைவிட்டு எழுந்து வாருங்கள்.

நாமார்க்கும் அடிமையல்லோம், நமனை அஞ்சோம், நரகத்தில் இடர் படோம்!

இந்த உறுதியும் எழுச்சியும் நம்பிக்கையும்உங்களுக்கான உண்மையுள்ள வழிகாட்டலுமே
எமது வரலாற்று வாழ்விடங்களில் மாற்றங்களை உருவாக்கும்.

இருள் அகன்று எங்கும் ஒளி தோன்றட்டும். அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

16010294_1669405423359386_875724120_o

Related posts: