வடக்கின் கல்விநிலை வீழ்ச்சிகண்டு செல்வது வேதனைக்குரியது – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, June 7th, 2016

வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை அண்மைக் காலமாக வீழ்ச்சி நிலையை அடைந்து வருவது வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது. கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்க்கும்போது வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் கடைசி இடத்தைப் பெற்றிருந்தது. இதற்கான காரணங்கள் இனங்காணப்பட்டு அவை உடனடியாக நிவர்த்திக்கப்பட வேண்டும். இதற்காகப் பொறுப்புள்ள அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க முன்வர வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாட்டின் கல்வி நிலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் JVP யினரால் இன்று (07)  கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது –

வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையானது அண்மைக் காலமாக வீழ்ச்சி நிலையை அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது. கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்க்கும்போது வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் கடைசி இடத்தைப் பெற்றிருந்தது. இதற்கான காரணங்கள் இனங்காணப்பட்டு அவை உடனடியாக நிவர்த்திக்கப்பட வேண்டும். இதற்காகப் பொறுப்புள்ள அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க முன்வர வேண்டும். அந்த வகையில் இங்கு நான் சுட்டிக் காட்டுகின்ற விடயங்கள் எமது கல்வித் துறையின் வளர்ச்சி கருதியதாகவே அமைகின்றன. இதன்போது ஒருவரையொருவர் குற்றஞ் சாட்டிக் கொண்டிருக்காமல் எமது கல்வித்துறை சார்ந்த முன்னேற்றங்களை நோக்கிச் செல்ல வேண்டும்.

‘போர்க் காலத்தில் உயர்வாக இருந்த கல்வி நிலை இன்று வீழ்ச்சி அடைந்துள்ளதாக” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள் கடந்த 27ம் திகதி யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வலய ஆசிரிய மாநாட்டின்போது தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன. உண்மைதான். யுத்தம் நிலவிய காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் வடக்கின் கல்வி நிலையை வளர்த்து – பாதுகாப்பதில் நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம் என்பதை எமது கல்விச் சமூகத்தினர் நன்கறிவார்கள்.

இன்றைய வடக்கின் கல்வி நிலையை மீள கட்டியெழுப்புவதற்கு நாம் பல ஏற்பாடுகளை செய்தாக வேண்டியுள்ளது.

இலங்கை கல்வி நிர்வாகச் சேவை (SLEAS) தகுதியுடையவர்கள் போதியளவினர் இல்லை. கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் போதியளவில் இல்லாததால் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந் நிலையில் வலய கல்விப் பணிப்பாளர்களே பிரதிக் கல்விப் பணிப்பாளர்களை நியமிக்கும் நிலை காணப்படுகின்றது என இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே இதற்கு தகுதியானவர்களை நியமிப்பது குறித்தும் தகுதி குறைவானவர்களுக்கு அத் தகுதியைப் பெற விசேட ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஆராயப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பல பாடசாலைகளில் பதில் அதிபர்களே கடமையில் உள்ளனர். 21. 11. 2015 அன்று அகில இலங்கை ரீதியில் 19000 பேர் கலந்துகொண்ட நிலையில் அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு அதில் 4079 பேர் தெரிவாகி முறையான நேர்முகப் பரீட்சையின் மூலம் அதிலிருந்து 3859 பேருக்கு அதிபர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 396 பேர் அடங்குவதாகவும் இவ்வாறு புதிதாக நியமனம் பெறவுள்ள அதிபர்களுக்கு பொறுப்பாக பாடசாலைகள் வழங்குவதைத் தடை செய்யும் வகையில் வடக்கு மாகாணசபை கடந்த 26ம் திகதி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் தற்போது கடமை நிறைவேற்று அதிபர்களாக கடமையாற்றுகின்றவர்களை அகற்றுவதில்லை என இத் தீர்மானத்தில் குறிப்பிடப்படுவதாகவும் குறிப்பிட்டு இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் இது தவறான முன்னுதாரணம் என்றும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர்கள் சங்கம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவருகிறது.

யுத்தம் நிலவிய காலகட்டத்தில் பல பாடசாலைகளில் பலர் கடமை நிறைவேற்று அதிபர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்கும் வகையில் 05. 02. 2011ல் நாம் விசேட அமைச்சரவைப் பத்திரம் கொண்டு வந்து அமைச்சரவைத் தீர்மானத்தின்படி 31. 12. 2010 வரை கடமையாற்றிய – அதுவரை 3 வருடங்கள் கடமையைப் பூர்த்தி செய்திருந்த தகுதியான அனைவருக்கும் நிரந்தர நியமனங்கள் வழங்கியிருந்தோம்.

எனவே மேற்படி நிலைமைகளை அவதானத்தில் கொண்டு மத்திய அரசு இதற்கு தகுந்ததொரு நடவடிக்கைளை எடுக்க வேண்டும்.

பாடசாலைகளில் ஆசிரிய வளப் பகிர்வுகள் உரிய முறையில் மேற்கொள்ப்படாத நிலை காணப்படுகின்றது. அதே நேரம் ஆங்கிலம் கணிதம் விஞ்ஞானம் தொழில் நுட்பம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் போதியளவில் இல்லை. இதனை சீர் செய்வதற்கென கடந்த காலங்களில் இத் துறை சார்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மற்றும் அத்துறைகள் சார்ந்து திறமை தேர்ச்சி பெற்றவர்களை குத்தகை அடிப்படையில் பணியில் அமர்த்த நாம் ஏற்பாடொன்றை முன்னெடுத்திருந்தோம். எனவே இவ்விடயங்கள் தொடர்பில் உடனடி அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

பதவி உயர்வுகள் உரிய முறையில; உரிய காலத்தில் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்ப்பதில் கண்டிப்பான நடைமுறை அவசியம். யாழ் நகர்புற பாடசாலைகள் சிலவற்றில் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கின்றனர். அதிகப் பிரிவுகள் செயற்படுகின்றன. இதனால் ஏனைய 75 வீதமான ஆரம்பப் பாடசாலைகளில் குறைவான மாணவ எண்ணிக்கையே காணப்படுகின்றது. எனவே இந்த நிலையை மாற்றத்தக்க வகையில் சில ஒழுங்கு விதிகள் மேற்கொள்ளப்பட்டு அவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கிராமப்புற பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நவீன கற்றல் வசதிகள் நவீன கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

விளையாட்டுத்துறை அபிவிருத்தி கருதி தரமான மைதானங்கள் உருவாக்கப்பட வேண்டும். உரிய உபகரணங்கள் வழங்கப்பட்டு சிறந்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

அண்மையில் ‘சிறந்த பாடசாலை” திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் ஏற்கனவே 1000 பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பாடசாலைகளாக உள்ளன எனத் தெரியவருகிறது. எனவே இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து ஏற்கனவே 1000 பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்த பாடசாலைகள் தவிர்த்து வேறு பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.

தேசிய பாடசாலைகளில் காணப்படுகின்ற கல்வி சாரா ஊழியர்கள் வெற்றிடங்கள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

பாடசாலைகளில் கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. எனவே தேசிய பாடசாலைகளினதும் மாகாணச் சபையின் கீழான பாடசாலைகளினதும் அனைத்து கல்வி அலுவலகங்களினதும் கணக்காய்வுகள்  முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் ஊடாக முன்னேற்றமான செயற்பாடுகளை நோக்கிச் செல்ல முடியுமென நம்புகின்றேன்.

இடமாற்றங்கள் யாவும் இடமாற்ற சபையின் ஊடாகவே நடைபெறுவதாகத் தெரியவருவதில்லை. எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

வடக்கு கல்வி அமைச்சரின் (RIM) பிரிவில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதியங்கள் திறைசேரியின் அனுமதியின்றி வழங்கப்படுவதாகத் தெரியவருகிறது.

பாடசாலை மாணவர்கள் அனுமதியில் பணம் அறவிடப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. இது தொடர்பா உடனடி நடவடிக்கைகள் அவசியமாகும்.

தேசிய பாடசாலைகளில் 7 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்கள் 2016ம் ஆண்டில் உள்ளக இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படவில்லை எனத் தெரியவருகிறது.

Related posts: