நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டுள்ளது – சபையில் டக்ளஸ் எம்.பி . சுட்டிக்காட்டு!

Tuesday, December 5th, 2017

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக அதனால் ஏற்படுகின்ற நோய்களைக் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களது எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டுள்ளது. அந்தளவுக்கு மிகவும் நெருக்கடியான நிலையிலேயே வைத்திய சேவைகளை வழங்க வேண்டியிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிராமப் புறங்களில் அதிகளவிலாக பாம்புக் கடிக்கு இலக்காகின்றவர்களது தொகை வருடத்திற்கு சுமார் 40 ஆயிரம் வரையிலேயே காணப்பட்டு வந்துள்ள நிலையில், அதுவும் தற்போது சுமார் 80 ஆயிரமாக அதிகரித்து, வருடத்திற்கு சுமார் 400 பேர் வரையில் உயிரிழக்கின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

அதே நேரம் இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை போன்ற மாவட்டங்களில் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுவோரது எணணிக்கையும் அதிகரித்துள்ள நிலைமைகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிகமாக நெற் செய்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் இந்நோய்க்கு அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் இந்நோய்க்க்கு 2,544 பேர் உட்பட்டுள்ளனர் என்றே தெரிய வருகின்றது.

இவ்வாறு பல்வேறு வகையிலான நோய்கள் நாட்டில் பரவியுள்ள நிலைமையினைக் காண முடிகின்றது. மனித வளத்தினை அதிகம் நம்பியிராத, இயந்திரங்களின் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், மனித செயற்பாடுகள் முடக்கப்படுகின்றபோது, நோய்களின் தாக்கங்கள் அதிகரித்து விடுகின்றன. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடு என்ற வகையில் வளரும் தேவைகளுக்கேற்பவும், முடக்கப்படுகின்ற மனித செயயற்பாடுகளுக்கு ஏற்பவும், மாசடையச் செய்விக்கின்ற சூழலுக்கு எதிரான செயற்பாடுகளின் முன்பாகவும் சுகாதாரத்துறையின் ஏற்பாடுகள் மாற்றம் பெற வேண்டியத் தேவையே மிகுதியாகக் காணப்படுகின்றன.

அந்த வகையில் சுகாதாரத்துறையின் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதே நேரம் நோய்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகள் ஊட்டப்படுகின்ற செயற்திட்டங்களை, அந்தந்த நோய்கள் குறித்த சர்வதேச தினங்களிலும், அதனை அண்டியதான சில தினங்களிலும் மாத்திரம் முன்னெடுத்துவிட்டு, பின்னர் அடுத்த வருடத்தில் அதே சர்வதேச தினங்கள் வரும்வரையில் கைவிட்டுவிடாமல், அந் நோய்களின் தாக்கங்கள் குறைகின்ற வரையிலாவது அந்தந்த விழிப்பூட்டல் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

Related posts: